பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பால் பயணம்


"ஏண்டா கிழட்டுப் பயலே... இந்த வயசிலே... ஒனக்கு என்னடா கேடு...? நானும் நீ என்னதான் செய்வேன்னு பார்த்துடலாமுன்னுதான் நடக்கேன்... ஏதோ எங்க நாய்னா போல இருக்கியேன்னு பார்த்தால்.... ஜோடி போட்டா நடக்கே...? பொறுக்கிப் பயலே.... ஒண் வயசுக்கு இது தகுமாடா? ஒன்ன விடப் போறதாய் இல்ல. தோ.. எங்கண்ணா சைக்கிள்ல வந்துட்டே இருக்கான், நீ ஆம்புளைன்னா இங்கேயே இருடா... டேய்... ஏண்டா ஓடுறே...? நீ எங்கேதான் போயிடப் போறே. ஒன்னை விடப் போற்தில்லடா..."

சம்பந்தம், அக்கம்பக்கத்தைப் பார்த்தபடியே லேசாய் நடந்தார். வேறு யாரையோ அவள் திட்டுவதுபோல், காதில் வாங்காதவர்போல் மெள்ள நடந்தார். அதே நடை... ஆகாய விமானம் புறப்படுவதற்கு முன்பு ஒடுவது போன்ற நடை... அந்த நடையும் ஓட்டமாயிற்று. ஆனால் சாலையோ அங்குமிங்கும் பிரியாமல் நேராய்ப் போயிற்று. அந்தப் பக்கம், இந்தப் பக்கம் ஓடிப் போக எந்தத் தெருவும் இல்லை. சாலையின் இரண்டு பக்கமும் பெரிய பெரிய கட்டிடங்கள். மூன்று கிலோ மீட்டர் வித்தியாசத்தில் ஓடினால்கூட, அவரை, சைக்கிள் மடக்கி விடலாம். அவள், இப்போது கண்ட கண்ட வார்த்தைகளை ஏவுகணைகளாக்கி ஏவிக் கொண்டிருந்தாள். 'ஒனக்கு ஒன் பொண்டாட்டிக்கும், மகளுக்கும் வித்தியாசம் தெரியுமாடா?' என்பதுதான் அவளின் குறைந்த சக்தி ஏவுகணை.

சம்பந்தம் தலைவிரி கோலமாக ஓடினார். குதிகால் தரையில் படுகிறதா, அதற்குமேல் தாவுகிறதா என்று கண்டுபிடிக்க முடியாதபடி புயல் வேகமாய் ஓடினார். திரும்பிப் பார்த்தபடியே ஓடினார். ஒரு சைக்கிள்... சிங்கிள்... சிறிது நிம்மதி. இன்னொரு சைக்கிள், டபுள்ஸ். கலக்கத்தோடு பார்த்தால். பின்னால் ஒரு பையன். லேசாய்த் தெளிவு. அய்ய்யோ... அது என்ன, சைக்கிள் பின்னால் ஒரு பெண். யாரது... அவளேதான்... கையை நீட்டி நீட்டிக் காட்டுகிறாள்... அவன் அசல் ரெளடி மாதிரியே இருக்கான். அய்யோ... அய்யய்யோ... சீட்டில் இருந்து எழுந்து... சைக்கிள்பாருக்கு மேல வந்து... பிடலை என்னமாய் மிதிக்கிறான். நானும், பிடல் மாதிரி ஆயிடுவேனா. தனியாய் அடித்தால்கூட... கையெடுத்துக் கும்பிட்டுத் தப்பிக்கலாம்... நட்ட நடு