பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

33


விதிகளின்படி இயங்கும். மனம் தன் வசத்தில் நிற்காது. ஓர் உணர்வை இன்னொரு உணர்வால்தான் மாற்ற முடியும். ஒரு பெண்ணைப் பார்க்கும்போது, அவளை உங்கள் மகளாக நினைத்துப் பாருங்கள். 'என் அம்மா இந்த வயதில் இப்படித்தான் இருந்திருப்பள்' என்று கற்பித்துப் பாருங்கள். ஒரு பெண்ணை காமுக சிறையில் இருந்து விடுவித்து, அவளைத் தாயாக்கிப் பாருங்கள். அவளை, அரூபமான ஆதிபராசக்தியின் உருவமாக ஆக்கிப் பாருங்கள். மகளாக்கிப் பாருங்கள். கண்ணில் படும் பெண்களையெல்லாம், உங்கள் பெண்களாகப் பாவித்துப் பாருங்கள். அந்த இனிமையான எண்ணத்தில் அந்தத் தூய தரிசனத்தில் நீங்கள் தந்தையாக இருந்துகொண்டே பிள்ளையாகலாம், பிள்ளையாக இருந்துகொண்டே தந்தையாகலாம்.

சம்பந்தம் கண்களை மூடி மனசைத் திறந்தார். சில்லிட்ட சிந்தனையைக் கற்பனையால் உலுக்கினார். அவருக்கு ஆயிரமாயிரம் மகள்கள்... கறுப்பிகள், சிவப்பிகள், இரண்டுக்கும் இடைப்பட்டவர்கள்... அத்தனை பேரும் பெறாமல் பெற்ற மகள்கள். அவரைத் துரத்திய அவளும் ஒரு மகள் தான்.

கலைமகள் - 1/10/88