பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

35


செம்மண் நிறத்திலான திரைத் துணியால் 'கோஷா' போடப்பட்ட கிழக்குப் பக்கத்து ஆபீஸர் அறைக்கும், காலிழந்த நாற்காலிகளையும், ஓட்டை ஒடிசல் மேஜைகளையும் கொண்ட மேற்கு பக்கத்து 'மூளி' அறைக்கும் இடைப்பட்ட செவ்வக அறைக் கூடத்தில், கடற்கரைப் பாண்டி, நர்த்தனமே ஆடினார். காலில் சலங்கையில்லாக் குறையைப் போக்குவது போல், இருபக்கமும் போடப்பட்ட மேஜை நாற்காலியை தட்டியபடியே அங்கும் இங்குமாய் ஆடியும் 'பாடியும்' அவர் சுழன்றபோது -

அதிகாரி அறைக்கு வெளியே, நான்கு அடி இடைவெளியில், அதன் வாசலுக்கு முன்பக்கமாய் போடப்பட்ட 'எஸ்' நாற்காலியில் நுனிக்கு நகர்ந்துவிட்ட அக்கவுண்டண்ட் பாத்திமா, மேஜையில் கையூன்றி, அதன்மேல் முகம் போட்டுக் கிடந்தாள். கடற்கரைப் பாண்டியின் குரல் ஏற ஏற, அவருக்கு பயப்படவில்லை என்பதுமாதிரி முகத்தை நிமிர்த்தினாள். அதேசமயம், உடல் எதிர் விகிதாச்சாரத்தில் கூனிக் குறுகியது. கூடவே, ஜன்னலுக்கு வெளியே, பிற அலுவலக வாசிகளும், 'பப்ளிக்கும்' ஜன்னல்களை மொய்த்தார்கள்.

போதாக்குறைக்கு. அவள் ஏதோ செய்யத்தகாத தப்பைச் செய்து விட்டதுபோன்ற பார்வை...

இதனால் பாத்திமா, தனது பச்சைச் சேலையால் தலைக்கு முக்காடு போட்டு, தென்னை ஓலைகளுக்குள் மின்னிய செவ்விளணி போல் முகங்காட்டி தன்னை வேடிக்கைப் பார்த்த கூட்டத்திற்கு ஒரு தன்னிலை விளக்கம்போல் கடற்கரைப் பாண்டியைப் பார்க்காமல், அந்தக் கூட்டத்தை ஓரங்கட்டிப் பார்த்தபடியே பேசினாள்.

'அவர் டிரான்ஸ்பரில் போனாலும்... இன்னும் வீட்டைக் காலி பண்ணல... எப்படியும் வருவாரு... வந்துதான் ஆகணும்... அநேகமாய் ஒரு வாரத்துல...'

'ஒரு வாரம்... ஒரு வாரமுன்னு மூணுமாசமா... இப்படித்தான் சப்பக்கட்டு கட்டுறேம்மா... மூணு மாசமா சம்பளம் வாங்காமல் இருந்திருப்பானா... மூணுமாசமா வீட்டுக்கு செலவழிக்காமல் இருந்திருப்பானா... மூணுமாசமா... பெண்டாட்டிகிட்டே...'