பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

37


பாத்திமாவிற்கு கேடயம்போல், நின்றுகொண்டு 'யோவ்' என்று ஊளையிட்டான். இது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிவிட்டது. இதனாலேயே, கடற்கரைப் பாண்டி ஒரு காரியம் செய்தார்.

கடற்கரைப் பாண்டி, திடீரென்று. ஆபீஸர் அறை முக்காட்டுத் துணியை சுருட்டி நிலைப்படிக்கு மேலே உள்ள பக்கவாட்டு கம்பியில் சொருகிவிட்டு, அந்த அறைக்குள் ஓடினார். அங்கே உள்ள சன்மைகா போட்ட வளைவு மேஜையை ஒரு பக்கமாய் இழுத்துப்போட்டுவிட்டு, அதற்குப் பின்னால், புத்தம் புதிதாய் கிடந்த மெத்தை நாற்காலியை இழுத்தபோது, சக்கரச் செருப்புகள் போட்ட அதன் கால்கள், அவர் பக்கமாய் நகர்ந்தன. நீலக் கலர் நாற்காலி. பின் வளைவாய் வளைந்து, இரு பக்கமும் யானைத்தந்தம் போல் வழுவழுப்பான கைப்பிரேம்கள் கொண்ட கலைவடிவு. ஒருவர் படுக்க இருவர் உட்காரும் அளவிற்கான சுகமான இருக்கை. உட்கார்ந்திருப்பவர் பின்னால் சாயச் சாய, அதற்கு ஏற்ப அது வளைந்து கொடுக்கும். முன்னால் நகர நகர, தன்னைத் தானே முன்பக்கமாய் மாற்றிக்கொள்ளும். அப்படிப்பட்ட முதுகு மெத்தை.

இப்படிப்பட்ட இந்த நாற்காலியை, வாசல் முனைக்கு கொண்டு வந்துவிட்ட கடற்கரைப்பாண்டி, அதன் உச்சியை, ஆபீஸரின் தலையாய் அனுமானித்து, வலது கையால் அதை திருகியபடியே, இடது கையை ஆட்டி ஆட்டிப் பேசினார்.

'இது எவன் அப்பன் வீட்டுச் சொத்து? பணம் கொடுக்க வக்கில்ல... வகையில்ல. இந்த லட்சணத்துல... நீ வேற, இதுல கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தே... இதோ இந்த ரூமுக்குள்ள, மல்லலாக்கப்படுத்து உட்கார நல்லா இருக்கே பெரியவரேன்'னு சொன்ன வாயி... இப்ப ஏமா பேச மாட்டேங்குது.'

பாத்திமாவுக்கு வெட்கமாகி விட்டது. கண்களைக் குறும்புத்தனமாய் படரவிட்ட வெட்கமல்ல. நிர்வாணப் பட்டது மாதிரியான அவமானகரமான வெட்கம். அலுவலக சகாக்களைப் பார்க்காததுபோல் பார்த்தாள். அவர்கள் தன்னையே தரம் தாழ்த்திப் பார்ப்பதுபோல் இருந்தது.