பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

உப்பைத் தின்னாதவன்


காலையில எட்டு மணிக்கு கடைக்குப் போய்... கூட்டிப் பெருக்கி, தண்ணி தெளிச்சு, ஒவ்வொரு மேஜையாய் நகர்த்தி... திங்கள் கிழமையிலிருந்து ஞாயிற்றுகிழமை மத்தியானம் வரைக்கும் உழச்சும் இருபது வருஷத்துல தொளாயிர ரூபாய் சம்பளத்துல கஷ்டப்படுற தொழிலாளிய்யா... முதலாளி இல்லாத சமயத்துல கேஷ் பில் போட்டு இந்த நாற்காலிய கொடுத்தேன். இப்போ, எங்க முதலாளி நானும் கூட்டுக் களவாணி என்கிறான். பணத்தை வட்டியோட கட்டாட்டால் போலீஸ்ல ஒப்படைப்பாராம். சர்க்கார் முத்திரையோட ஒரு ஏழைய ஏமாத்துறது நியாயமாய்யா..? பேச வந்துட்டான் பேச. நான் லாக்கப்புக்கு போனா, எவன்யா ஜாமீன் எடுப்பான்? என் குடும்பம் நடுத்தெருவுல நிக்கப் போவுது... வேணுமுன்னா வந்து வேடிக்க பாருய்யா...'

இப்போது கடற்கரைப் பாண்டியின் ஓங்காரக் குரல், உடைந்து ஓலமிட்டது. எல்லோரும், அவரை ஒருமித்தும், ஒரே முனைப்பாகவும் பார்த்தார்கள். உயரத்துக்கு ஏற்ற உடம்பில்லாதவர்... பைசா நகரம்போல் ஒடிந்து விழப் போவது மாதிரியான முன்வளைவு. வெடு வெடுப்பான பார்வை... முண்டா பனியனைக்காட்டும் காட்டா மோட்டா கிழிசல் சட்டை. நார் நாராய் போன நாலுமுழ வேட்டி...

தலையில் கைவைத்தபடியே. தரையில் உட்கார்ந்த கடற்கரைப் பாண்டியை பார்க்க சகிக்காத வேதமுத்து, பாத்திமாவிடம் கிசுகிசுத்தான்.

மேடம்... ஓங்க பணத்துல இருந்து கொடுத்துடுங்க. அப்புறமாய் ஆபீஸர்கிட்ட வாங்கிக்கலாம்.'

'ஒன்கிட்ட சொல்லக் கூடாது... ஆனாலும் சொல்ல வேண்டிய கட்டாயத்துல சொல்றேன் முத்து... ஆபீஸ் சம்பளத்தை 'அவர்'கிட்ட அப்படியே கொடுத்திடணும். அப்புறம் தினமும் பஸ் சார்ஜ்க்கும், ஒரு கப் காபி குடிக்கிறதுக்கும் அவர்கிட்ட கையேந்தி பிச்சை வாங்கணும்... இதுதான் என்னோட பிழப்பு...

பாத்திமா ஏதோ பணம் கொடுப்பாள் என்பத மாதிரி வேதமுத்துவின் கிசுகிசுப்பின் மூலம் நம்பிக்கைப் பெற்ற கடற்கரைப் பாண்டி, அவள் கையை விரித்து பதிலுக்கு கிசுகிசுப்பதில், ஏமாற்றமடைந்து ஒப்பாரி போடுவதுபோல் பேசினார்.