பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

47


அப்போது இந்த சண்முகம் வருத்தப்படாமல் 'வாழ்க' போட்டான். ஊரான் கடனை அடைத்தாள், தன் கடன் தானாக அடைபடும் என்று தமர்ஷ்கூட செய்தான். ஆனால் அதே டெப்திரி சண்முகம், இப்போது ஏன் இப்படி கத்துறான்?.

'பாவிப் பயலே!... நடுத்தெருவுக்கு வந்துட்டியடா உனக்கு மூளை எங்கடா போச்சு.'

வேதமுத்து திக்கித் திணறியபோது, பாத்திமாவும் கத்தினாள்.

'ஒன்னை யாருய்யா... அவனுக்குப் போய் பணம் கட்டச் சொன்னது...'

வேதமுத்து திருப்பிக் கத்தினான்.

'ஒங்கள... மாதிரி என் மனசு கல் இல்ல...'

'அய்யா புண்ணியவானே... அதுக்கு ஒரு பரிசும் வந்திருக்குது தெரியுமா.. மூன்று மாதத்துக்கு முன்னால, டிரான்ஸ்பர் வந்த அவசரத்துல, உன்கிட்டயே மூவாயிரத்து முன்னூறு ரூபாயைக் கொடுத்து நாற்காலி கடனை அடைக்கும்படி பால்வண்ணன் சொன்னானாம். நீதான் பணத்தைக் கட்டாமல் கையாடல் செய்துட்டியாம். இதுக்கு நீ அனுப்புன ரசீதையும் ஆதாரமாக் காட்டி உன் மேலேயே ஒரு புகார் கொடுத்திருக்கான், நம்ம பழைய ஆபீஸர்.'

'துரோகிப் பயல்... நான்தான் அவனுக்கு டெலிபோன்ல விஷயத்தை சொன்னேன்...'

'நீ ஆயிரம் சொல்லுவே... அதை மேலிடம் நம்பணும்' என்கிறது கட்டாயமா... அப்படியே நம்பினாலும்... நீ ஆபீஸ் ரகசியத்தை வெளியிட்டதுக்காக மேற்கொண்டும், ஒன்மேல் ஆக்ஷன் எடுக்கலாம் இல்லையா... பணத்தை கடன் கொடுக்கலாம்... ஆனால் மூளய கடன் கொடுக்கலாமா...'

'எதுக்காகம்மா இப்படி சுத்தி வளைச்சு பேசுறீங்க..'