பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

51


டீக்கடைகளுக்கு எதிர்த்தாற்போல், பெட்ரோல் பங்கிற்கு அருகே உள்ள தன் பெட்டிக் கடையில் இருந்து, காதுகளைப் பொத்திக்கொண்டு, கண்களை வெறித்து வைத்துக் கொண்டிருந்த ராமையா, கடைக்கு முன்னால், திராட்சைப் பழங்களில் அழுகியதை அப்புறப் படுத்திக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்து அன்னாசிப் பழத்தை... எடு என்றான்.

டவுனில் போய், பழங்களை, அப்போதுதான் அவள் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். கடையில் 'மிக்ஸி' இருந்தது. வேர்க்க வைத்து விழுங்குவதுபோல் பயமுறுத்தும் வெயில் காலத்தில், லாரிக்காரர்கள், இந்த கடையில் வந்து 'ஜூஸ்' சாப்பிடுவது உண்டு. பாதிக்குப் பாதி லாபம் கிடைக்கும். கடையில் விற்பனையான மிட்டாய், சிகரெட் வகையறாக்களில் கிடைத்த சொற்ப லாபத்தையும், மனைவியின் மூக்குத்தியை அடகு வைத்து கிடைத்த பணத்தையும் கொண்டு ஒரு வாரத்திற்கு முன்புதான் ஆயிரம் ரூபாயில், இந்த மிக்ஸியை வாங்கினான். 'கல்லா'வில் கணக்குப் பார்க்கும்போது, ஐந்தாறுரூபாய் அதிகமாக விழுகிறது. கடனுக்கு வட்டி கட்டி விடலாம்.

தேர்தல் கொட்டகைகளில், கோஷங்கள் கேவலமாக போய்க் கொண்டிருந்தன. கடையில் சிகரெட் வாங்க வந்த நான்கைந்து கட்சிக்காரர்களிடம் 'ஏம்பா... இப்படி கெட்டுப் போறீங்க... தோற்றவனும், ஜெயித்தவனும் ஒண்ணாய் சேருவாங்க... கல்யாண வீட்ல கைகுலுக்கிக்குவாங்க... கடைசில... மண்டைய உடைச்சிக்கிடுறது நீங்கதான்... ஆயிரந்தான் இருந்தாலும் நாம் அண்ணன் தம்பிங்க... தலைவருங்க மேல பாசம் வையுங்க... அதுக்கா, நமக்குள்ள இருக்கிற பாசத்தை குறைக்க வேண்டாம்... பாசத்தை குறைத்தாலும் பராவியில்ல... பகையை வளர்க்க வேண்டாம்..." என்று சொல்லப்போனான். வாய்க்கு வந்தததை, தொண்டைக்குள் போட்டுக் கொண்டான். மனைவியின் முகம் கூட எதிரியின் முகம்போல் தோன்றும் காலம். நல்லதாகச் சொன்னாலும், கெட்டதாக எடுத்துக் கொள்வார்கள். எதிர்கட்சியை ஒழிக என்றும். தன் கட்சியை வாழ்க என்றும் சொல்லாத எந்த வார்த்தையும், அவர்களுக்கு நன்றாகத் தெரியாது.