பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

53


குட்டிகளுக்குக் கொடுக்க ஆளில்லை... சைக்கிளில் போகும்போது, லாரியால் அடிபட்டு பாதியிலே போன முனுசாமி குடும்பத்திற்கு, லாரி முதலாளியைப் பிடித்து நஷ்ட ஈடு கேட்க நாதியில்லை...

சொந்தச் சகோதரர்கள், துன்பத்தில் சிக்கும்போது, போர் தொடுக்க மனமில்லாத இந்தத் தொண்டர்கள், இப்போது எப்படி போர் தொடுக்கிறார்கள். எப்படி அடித்துக் கொள்கிறார்கள்!... சம்பந்தப்பட்ட கர்ணமும், கோவில் சொத்தை மடக்கிப்போட்ட வீரராகவனும், எதிர் எதிர் கட்சிகளில் இருந்துகொண்டு, தங்களின் பாவங்களை, புண்ணியங்களாக்க முடிகிறது... ஏழை பாழைகளை, 'சக்கராயுதத்தால் கொல்லும் லாரி முதலாளி, இருதரப்பும் நன்கொடை கொடுத்து, நல்ல பேர் வாங்க முடிகிறது. அநியாயக்காரர்கள் முகாம் கொண்ட அமைப்புக்களிலேயே, நியாயங்களை, விற்கவும், வாங்கவும். விசுவாசமாக முயற்சி செய்யும் இந்தத் தடிராமன்களை, எப்போது திருத்துவது? யார் திருத்துவது?...

'ஏன் பித்துப் பிடிச்சு பார்க்கறே?' என்று மனைவி சொன்ன பிறகுதான், ராமையா சிந்தனையை உதறுவதுபோல், தலையை, அங்குமிங்குமாக ஆட்டி கொண்டு. கடைக்கு வந்த இரண்டு வாடிக்கையாளர்களை, கவனிக்கத் தலைப்பட்டான்.

'மாம்பழ ஜூஸ் கொடு...'

ராமய்யா, இரண்டு 'கிளிமூக்கு' மாம்பழங்களை தோலுரித்துவிட்டு, பாளம் பாளமாகச் சீவி, மிக்ஸியில் போட்டான். ஸ்விட்சை, தட்டிவிடப்போனபோது, ஒரு அணியின் தொண்டர்க்ள் தேர்தல் சுவரொட்டி ஒன்றைக் கொண்டு வந்தார்கள். ராமையாவின் கடையின் நடுப்பக்கம் சாய்த்து வைத்தார்கள். இன்னொரு தொண்டன், வேறொரு சுவரொட்டியைக் கொண்டுவந்தான். முத்தையன் கட்சியினரின் வெறித் தாக்குதலால் ஒரு தொண்டனின் உயிர், ஆஸ்பத்திரியில அல்லாடுகிறது என்று அதில் எழுதப் பட்டிருந்தது. அந்த தட்டியை ஒரு தொண்டன், தேர்தல் சுவரொட்டியோடு சேர்த்து வைத்தான். ராமையா, பக்குவமாகப் பேசினான்.