பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

55


அடக்கத்தைக் காண்பிக்க வேண்டும். சக்கரவர்த்தியின் சவால் குதிரையை, எந்த மன்னரும் கட்டிப் போட்டால், அது போர்ப் பிரகடனமாக எடுத்துக் கொள்ளப்படும். அதே அந்த குதிரை, இப்போது தேர்தல் யாகத்தில், தட்டியாக வந்து ராமையாவின் கடையில் நிற்கிறது. இவனால் தட்டிகளைத் தட்டிப் பார்க்க முடியுமா...

ராஜு போய்விட்டான். ராமய்யா, எதுவும் புரியாமல், மிக்ஸியில் சிதறும் கனிச்சதைகள் போல் குழம்பிப் போனான். 'சரி கடைக்கு வா... தட்டி இருந்தால் இருந்துட்டுப் போட்டும்...' என்றாள்.

ராமய்யா வெளியே இருந்தே குரல் கொடுத்தான்.

'காலையில் அவங்களை... தட்டியை - வைக்கக் கூடாதுன்னு சொன்னேன். அவங்களுக்கு என்ன ஜவாப்பு சொல்றது?'

'என்னத்தைச் சொல்ல... அவங்களும் வைச்சால் வச்சுட்டுப் போகட்டும்... காலத்த அனுசரித்து நடக்கணுமுன்னு ஒனக்கு ஏன் தெரியமாட்டாக்கு? இந்தக் காலத்துல... நல்லதுல கலந்துக்காட்டா விட்டுடுவாங்க... கெட்டதுல கலந்துக்காட்டா விடமாட்டாங்க... சரி சரி... உள்ள வா...'

ராமய்யா, உள்ளே போனான். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று இருதரப்புமே கோஷங்கள் போட்டாலும், தன்னுடைய சொந்த இடத்தில், அரசியல் கோஷங்கள் நுழைய முடியாமல் தடுக்கும் உரிமை தனக்கு இல்லை என்பதை விசித்திரமாக உணர்ந்து, விரக்தியாகச் சிரித்துக் கொண்டான்.

மறுநாள் பிறந்தது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பாராங்குசம் கட்சியின் தொண்டனின் உயிர் அபாயக் கட்டத்திலேயே இருந்ததாகச் செய்தி வந்தது. உடனே அந்தக் கட்சியின் தொண்டர்கள், ஆஸ்பத்திரிக்கு முன்னால் கூடி, பிறகு தலைவராக விரும்பிய ஒரு தலைவரின் தூண்டுதலில், வன்முறையை கண்டிக்கும் வகையில், அதற்கு அமைதியாக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், 'கறுப்புப் பேட்ஜ்களை' அல்லது கறுப்பு சட்டைகளை அணிந்துகொண்டு, டவுனுக்குள் ஊர்வலமாகப் போனார்கள். கண்ணில் தென்பட்ட