பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

இந்நாட்டு மன்னர்கள்


எதிர்க்கட்சித் தொண்டர்களை உதைத்தும், கட்சிக்கொடிகளைக் கிழித்தும். வன்முறை எதிர்ப்பை வாஞ்சையோடு காட்டினார்கள். எதிர்க்கட்சித் தொண்டர்கள் ஓடி ஒளிந்தார்கள்.

எப்படியோ, இவர்கள், அடித்ததில் களைப்பும், உதைத்ததில் இளைப்பும் ஏற்பட்டு, ஒரு மணிநேர கோர தாண்டவத்திற்குப் பிறகு, ஆளுக்கொருவராகச் சிதறிப் போனார்கள். இவர்கள் போனதும், அவர்கள் திரண்டார்கள். ஒடி ஒளிந்தவர்கள், ஒன்றுதிரண்டு, 'கறுப்பு பேட்ஜ்' அணிந்தவர்களை தேடிப் பார்த்தார்கள். யாரும் கிடைக்கவில்லை. அவர்களால் அடையாளப்படுத்த முடியாதபடி, ஆங்காங்கே போய்க் கொண்டிருந்த எதிர்க்கட்சித் தொண்டர்கள், கறுப்பு பேட்ஜ்களை கழற்றி வைத்துக் கொண்டார்கள்.

ஆள் கிடைக்காததற்கு தேர்தல் அலுவலகங்கள் கிடைத்தன. அவற்றிற்கு தீவைத்த தொண்டர்கள், ஒரு ஆள்கூட கிடைக்காத ஆத்திரத்திலும், ஒரு தொண்டனையாவது உதைக்க வேண்டும் என்ற லட்சியப் பிடிப்போடும். டவுனுக்குள் இருந்த பழக்கடை பக்கமாக வந்தார்கள். அங்கே, ராமையா. ஒரு கறுப்புச் சட்டையுடன், பழக்காரர் ஒருவரிடம் 'பேரம்' பேசிக்கொண்டிருந்தான். 'இப்போதுததான் ஜூஸ் விற்கிற நேரம்... பஸ் போற நேரம்... சீக்கிரமாக கடைக்குப் போகணும்... கட்டுபடியாகிற விலையாச் சொல்லுங்க' என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தபோது, அணிவகுத்து வந்த தொண்டர் கூட்டம், அவனை எதிர்க் கட்சிக்காரனாய் நினைத்து, தெருவுக்கு இழுத்து வந்தார்கள். பின்னால் தள்ளி, முன்னால் உதைத்தார்கள்.

'நான் என்ன தப்பு பண்ணினேன்... என்னை ஏன் அடிக்கீங்க' என்று ஒன்றும் புரியாமல் கத்திய ராமையாவின் வாய், கடைசியில் ரத்தத்தைக் கக்கியது. அவனை, அங்கேயே குற்றுயிரும், கொலையுயிருமாய் போட்டுவிட்டு, தொண்டர்கள், ஒரு லாரியில் ஏறிக் கொண்டார்கள். கூட்டு ரோட்டில் வந்தார்கள்.

லாரி வாகனாதிபதிகளைப் பார்த்த பாராங்குசத்தின் ஆட்கள் தேர்தல் அலுவலகத்தை அப்படியே போட்டுவிட்டு, ஓடி விட்டார்கள். தேர்தல் தட்டிகளை வைத்திருந்த டீக்கடைக்காரர்கள். அவற்றை உள்ளே எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டார்கள்.