பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

59


பெரிய அரசு மாளிகையின் ராத்திரி ராசாவாக, தன்னைப் பாவித்துக் கொண்டதில் ஒரு பெருமிதம்... அத்தனை அதிகாரிகளும் அவனை நம்பி இந்த மாளிகையின் இரவு நேரப் பொறுப்பை கொடுத்திருப்பதில் ஒருவித பொறுப்புணர்வு...

பங்களா படிக்கட்டுகளில், கால் பரப்பிக் கிடந்த கதிர்வேலு எழுந்தான். வேகமா ஒரு நடை நடந்து, வீட்டுக்கு போயிட்டு வரலாமா. இவன் போகாமல் தங்கை சாப்பிடமாட்டாள். ஒருவேளை அலறியடித்து இந்தப்பக்கம் வந்திடக்கூடாது. இரவு நேர போக்கிரிகளுக்கு பேர்போன இடம் இது...

வேக, வேகமாய் நடக்கப்போன கதிர்வேலு, அந்த மாளிகையின் வெளிவாசல் முனைக்கு வந்ததும், பின்வாங்கினான். திருடர்கள் கொள்ளையடித்துப் போகிற அளவிற்கு எதுவும் இல்லைதான். தொட்டால் பிய்யும் கதவுகள். தட்டினால் உடையும் சுவர்கள்.

எந்த திருடனும் பகலில் நோட்டம் பார்க்காமல் இரவில் திருடமாட்டான். நோட்டம் பார்த்தவனோ வரவே மாட்டான். ஆனாலும் மூணு கிலோமீட்டர் டவுனில் சினிமா பார்த்துவிட்டு வருகிறவர்கள், குறுக்கு வழியாக இந்த பங்களாப் பாதையை பயன்படுத்தியதுண்டு. இந்த இருட்டில் வழக்கம்போல் வந்து கண் மண் தெரியாமல் அவன் ஆசையோடு சீவி சிங்காரித்த செடி கொடிகளை மிதித்து விடக்கூடாதே...

கதிர்வேலுக்கு தூக்கம் வந்தது. ஆனாலும் தூக்கம் கலைக்க அவன் சுற்றிச் சுற்றி நடந்தான்.

உலாத்திக் கொண்டிருந்த கதிர்வேலு, அப்படியே நின்றான். அந்த தேசியச் சாலையிலிருந்து உருவம் தெரியா ஒன்றை இரண்டு உருளை விளக்குகள் இபத்துக் கொண்டு வருகின்றன. இவன் எட்டிப் பார்ப்பதற்கு முன்பே அது அவன் முன்னால் வந்து நிற்கிறது. அந்தக் காரின் முன்கதவு வழியாக ஒரு ஒட்டடைக் கம்பன் இறங்குகிறான். பின் கதவை திறக்கிறான்... கதிர்வேலுக்கு பரிச்சயமான அவர், காரிலிருந்து இறங்ககிறார். நாற்பது வயதுக்காரர் கழுத்து இருக்க வேண்டிய இடத்தில் தலை இருக்கிறது. முட்டிக் கால்களை வயிறு மறைக்கிறது. டாவடிக்கும் செயின் தரையில் காலூன்னும் முன்பே கதிர்வேலிடம் குசலம் விசாரிக்கிறார்.