பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

63


ஒரு டப்பா புருஷனும் இருக்கிறான். உதடுகளின் தடிப்புக்களைவிட சாயத்தின் தடிப்பே அதிகம். பேசுவதைவிட கண்ணடித்துச் சிரிப்பதே அதிகம். அவரைப் பகல் நேரத்தில், 'அண்ணே... அண்ணே' என்கிறவள்.

அவள், பச்சைமை புருவங்கள் உயர, இரண்டு கரங்களையும் தூக்கி நெட்டி முறித்து, கொட்டாவியான வாய்க்குள் கொடுக்கு விட்டு விட்டு, வானொலி சுவிட்சை தட்டிவிட்டாள். அந்த பாட்டிற்கு ஏற்ப உடம்பை அங்கு மிங்கும் ஆட்டினாள். பிறகு, 'அந்த ரூமு என்னாச்சு', அங்கேதான் மூடு வரும்'... என்று சொல்லிவிட்டு 'களுக்கு' சிரிப்பாய் சிரித்தாள். அவர், அந்த அறைக்குள் அவள் எவனோடு போயிருப்பாள் என்று அவளையும் இன்னொருத்தனையும் கடந்த நிகழ்ச்சிகளுக்குள் தேடிக் கொண்டிருந்தார். அப்படி தேடத்தேட அவரை கோபம் தேடிக் கொண்டிருந்தது. கதிர்வேலோ அவள் போக்கையும், நோக்கையும் தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக நினைத்தான். விடுதிகளில் உள்ள மாமா பையன்களுக்குக் கூட கொஞ்ச மரியாதை கிடைக்கும். அதற்குள் அவர் சர்வசாதாரணமாக ஆணையிட்டார்.

"சரி கதிர், சாப்புடனுமுன்னா சாப்பிடு... துங்கணுமுன்னா தூங்கு... உன்ன பெர்மனன்ட்டு ஆக்குறது என்னோட பொறுப்பு... கவலைப்படாதே..."

கதிர்வேலு கவலைப்பட்டபடியே கால், கை நகர்த்தினான். ஒரு காலை மட்டும் வாசலுக்கு வெளியே வைத்தபோது, அவர் கதவைச் சாத்தினார். இவன்தான் கதவிடுக்கில் அடுத்தகால் சிக்காமலிருக்க அதை அவசரமாக வெளியே எடுத்தான். பித்துப் பிடித்ததுபோல் நடந்து புல்வெளித் தரையில் முட்டுக்காலிட்டு, முகத்தை அதில் சாத்தினான். அவனுக்குள் மனம் எரிந்த கட்சிக்கும், மூளை எரியாத கட்சிக்கும் வாதாடி பட்டி மண்டபம் நடந்தது. அவனது சூப்பர்வைசர் மானசீக மனசாட்சி நடுவரானார்.

கண்டுக்காமல் விட்டால் அரசாங்கத்தில் நிரந்தர ஊழியனாகலாம். அந்த அந்தஸ்த்தில் கடன்பட்டும், உடன்பட்டும் தங்கையைக் கரையேற்றலாம். ஏழெட்டு மாதங்களாய், அல்லும் பகலும் பாடுபட்ட உழைப்பு வீணாகக் கூடாது. எல்லா இடத்துலயும் நடக்கிறதுதான் இங்கேயும் நடக்குதுன்னு இருக்கலாம். ஆனால் இந்த இடத்தில்