பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

ஒருவழிப் பாதை


என்று அக்கெளண்டண்டும் ஃபீலர்ஸ் விட்டார்கள். விவகாரத்தை மழுப்பிவிடலாம் என்று நினைத்த மானேஜிங் டைரக்டர். இறுதியில் இருவருக்குமே 'மெமோ' கொடுத்தார். அக்கெளண்டண்டுக்கு 'சிவியர் மெமோ'.

சேல்ஸ் - மானேஜராக இருந்தும், தனக்கு கீழே வேலை பார்க்கும் ஒருவனுக்கு சஸ்பென்ஷன் வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்று சதாசிவமும், எத்தனையோ சேல்ஸ் மேனேஜரை மிரட்டிய தன்னால் இவனை மிரட்ட முடியவில்லையே என்று சிங்காரமும் அதிருப்தி அடைந்தார்கள். எப்படியோ இருவருக்குமிடையே ஒருவித 'டிடெண்ட்' நிலவி வந்தது.

அதைக் கலைக்கும், ஒரு நிகழ்ச்சியும் விரைவில் வந்தது.

ஊழியர் பிரதிநிதிக்குழு ஒன்று சேல்ஸ் மானேஜர் சதாசிவத்தின் முன்னால் வந்து நின்றது. அவனும், தான் ஒன்றும் சர்வாதிகாரி இல்லை என்பதை காட்டும் 'ஹம்பிள் பிரைட்' (எளிமையில் கர்வம் கொள்வது) உந்தப்பட்டவனாய் அவர்களை உட்காரச் சொன்னார். பியூன் கொண்டு வந்த காபி டம்ளர்களை, அவனே எடுத்து ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு பேச்சைத் துவக்கினான்.

"என்ன விஷயம்?"

"வந்து ஸார்... நம் கம்பெனி ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து வழக்கமா இந்த வருஷமும் நாடகம் நடத்த போறோம்".

மானேஜர் உச்சி குளிர்ந்தான். கம்பெனி சாவனீர்களிலும், அவன் கொடுக்கும் விளம்பரத்தை வாங்கிக் கொண்டு, அவன் எழுதியதை அப்படியே பிரசுரிக்கும் இதர கம்பெனி மலர்களிலும், அவன் கதைகள் எழுதியிருந்தான். அந்த கதைகளைப் படித்துவிட்டு, இவர்கள், தன்னிடம் 'ஸ்கிரிப்ட்' கேட்க வந்திருக்கிறார்கள். வெரிகுட்.

வந்தவர்கள் 'ஸ்கிரிப்டை விட்டுவிட்டு, நன்கொடை சமாச்சாரங்களை பேசினார்கள். மானேஜருக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல், வாய்விட்டே கேட்டான்.