பக்கம்:சிதறல்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அவனுக்கு நான் என்ன சொல்ல முடியும்.

"மனிதன் படைப்புக்குத் துணை செய்கிறான்; அவன் படைப்பதில்லை" என்ற பேருண்மையை எப்படி அவனிடம் சொல்லமுடியும்.

அவனுடைய மென்மையான விரல்கள் என் கன்னத்தைத் தடவிக் கொடுக்கும். அவன் தலைமயிர் முன்னால் அலை அலையாக எழும். அதைப் பின்னால் தள்ளுவேன்.

நான் எங்காவது போய்விட்டு வந்தால் அவன் ஒரே அழுகை அழுவான்.

ஒரே கோபமாக இருப்பான். அவன் முகத்தில் தான் எத்தனை கோணல்கள். அங்கே விளையாடிக் கொண்டு இருக்கும் பொம்மைகளைப் போட்டு அடிப்பான்.

"அடிக்காதடா கண்ணு" அது என்னடா செய்தது" என்று அவனிடம் பேசுவேன்.

அங்கே இருந்து வந்து ஓங்கி ஒரு அடி கொடுப்பான்.

அந்த அடியை அன்போடு ஏற்றுக்கொள்வேன். அவன் கைகளில் அடிபடக் கொடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்துச் சந்தோஷப்படுவேன். கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் ஓடிவந்து என் கன்னத்தைத் தொடுவான்.

"முத்தா கொடுடா கண்ணு" என்று கெஞ்சுவேன்.

அவன் வாயிதழ்கள் என் கன்னத்தைச் சுவைக்கும். என் கன்னம் அவன் வாயிதழ்களைச் சுவைக்கும்.

அதற்குப் பிறகு அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியாது. நான் கொஞ்சம் நேரம் தூக்கி வைத்துக் கொள்வேன். அதோ பாரு என்று சன்னலைக் காட்டுவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/21&oldid=1258282" இலிருந்து மீள்விக்கப்பட்டது