பக்கம்:சிதறல்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

பம்பரம் ஆடுவதைப் பார்த்து இருக்கிறேன். நடுவில் ஒரு பெரிய வட்டம் இருக்கும். அதில் இந்தப் பையன்கள் குத்தி விளையாடுவார்கள். அது வெளியே வந்துவிட வேண்டும். அங்கேயே சுற்றி அகப்பட்டுக்கொள்ளும். அதற்குமேல் அது வெளிவராது. அதை உள்ளே வைத்து மற்றவர்கள் குத்துவார்கள். இதுதான் என் நிலைமை. குடும்பம் என்ற வட்டத்தில் வைத்து என்னை அந்தப் பம்பரத்தைப்போல் மடக்கி விட்டார்கள்.

இனி நான் ஆடமுடியாது: வெளியே ஒடமுடியாது; சுற்ற முடியாது; சுற்ற வேண்டியது இல்லை. ஆட்ட விதி அப்படி, ஆனால் வெளியே இருந்துகொண்டு அதைக் குத்தும் பொழுது அது எப்படி சொட்டையாகாமல் இருக்க முடியும். அந்த வட்டத்தை விட்டு பம்பரம் வெளியே வந்தபிறகுதான் அதற்கு விடுதலை கிடைக்கிறது. நான் வெளியே வர நினைக்கிறேன்.

'ரவி' அழுகிறான். அவனுக்கு நான் தேவைப்படுகிறேன். அவன் எனக்குத் தேவைப்படுகிறான். அவருக்கும் நான் ஒரு காலத்தில் தேவைப்பட்டேன். இப்பொழுது புறக்கணிக்கப்பட்டேன்.

அவர் என்னை விரும்பித்தான் மணம் செய்துகொண்டார்; நான் அவரை விரும்பித்தான் மணம் செய்துகொண்டேன். இது மேடைப்பேச்சு அல்ல; தப்பித்துக்கொண்டு வெளிவந்துவிட: என் அறிவு, திறமை, ஆற்றல் அத்துணையும் தோற்றுவிட்ட இடம் இதுதான். மேடையில் சுழற் கோப்பைப் பரிசு பெற்றேன்; இங்கே என் ரவியைப் பரிசாகப் பெற்றேன். அவன் கப்புகளை வைத்து விளையாடுகிறான். நான் அவனை வைத்து விளையாடுகிறேன்.

இப்பொழுது அவர் என்னை மதிக்கவில்லை. நான் அவரை மதிக்க முடியாமல் போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/41&oldid=1280451" இலிருந்து மீள்விக்கப்பட்டது