பக்கம்:சிதறல்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

என்பதைத் தெரிந்து கொண்டேன். ஏதோ கதை டயலாக் பாட்டு சும்மா உட்காருவதற்கு ரசிப்பதற்கு அவர்கள் ஏதோ தயார் செய்து அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அந்தப் படங்களுக்கும் குடிபோதைக்கும் அதிக வித்தியாசம் சில சமயங்களில் தெரிவதில்லை. சரி ஏதோ ஒரு போதை வேண்டும். வரட்டுமே என்று தான் நினைப்பேன். முக்கியமாகத் தமிழ் நாட்டுப் படங்கள் பெண்களையே பிரச்சனையாக வைத்துப் படங்களை எடுக்கின்றன என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது. அதாவது அவர்களுக்காக இரக்கப்படுகின்ற படங்கள் தான் ஏராளம்.ஆனால் ஒன்றுகூட வழி கூறி நான் பார்க்கவில்லை. முடியாது. சொல்லிவிட்டால் அப்புறம் என்ன இருக்கிறது.

நானும் தான் இந்த அனுபவங்களை வைத்து எண்ணிப் பார்க்கிறேன். என் பிரச்சனை என்ன? அந்த முதல் டிக்கட்டு நண்பன் நாடகத்தில் எடுத்த போட்டோ அதை அவன் வைத்துக் காப்பாற்றியது. அதை வைத்துக் கொண்டு அவன் கதையைப் பின்னிவிட்டான். அவன் பின்னிவிட்டான் என்று எப்படிச் சொல்வது. கதை தானாக அப்படிப் பின்னிக் கொண்டது.

வாழ்க்கைச் சிக்கல்களைத் தமிழ்ப் படத்தில் எழுப்பி விடுகிறார்கள். ஆனால் அவர்களால் தீர்த்து வைக்க முடிவதில்லை. அது உண்மை தான். என் சிக்கல் மட்டும் எப்படி எழுந்தது ஏன் எழுந்தது. அது இன்றைய சமுதாய வாழ்வின் துழ்நிலை. அதைத் தீர்க்க முடியுமா? முடியாது: முடிந்துவிட்டால் அதற்குச் சிக்கல் என்று கூற முடியாது.

ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள் என்பது பழமொழி: மோகம் முப்பது வருஷம் என்பது திரைப்படம் காட்டும் புது வழி. ரவி பிறந்ததும் அது மாறிவிட்டது அது என் வழி. நானும் 'அவரை'ப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/51&oldid=1285025" இலிருந்து மீள்விக்கப்பட்டது