பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

மனத்தினைப் பார்த்துக் கேட்பதாக அந்தப் பாடல் அமைந்துள்ளது.


தாயுமானவர்

ஏ! நெஞ்சமே! நாத வடிவமாக இருக்கின்ற இறைவனோடு இரண்டறக் கலந்து பேரின்ப சுகத்தினை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கின்றபொழுது என்னை, மனமாகிய நீ, வசப்படுத்தி, வேதனைக்கு உள்ளாக்கி, துன்ப மார்க்கத்திற்கு இழுத்துக்கொண்டு போகிறாயே, இது நல்லது தானா? --- நெஞ்சத்தைப் பார்த்து அறிவு வேண்டிக் கொள்வதாகப் பாடல் அமைந்துள்ளது---

"நாதனை நாதாதீத
நண்பனை, நடுவாய் நின்ற
நீதனைக் கலந்து நிற்க
நெஞ்சமே, நீவா என்றால்
வாதனை பெருக்கி, என்னை
வசம் செய்து, மனம் துன்மார்க்க,
போதனை செய்தல் நன்றோ?
பூரணானந்த வாழ்வே!

இந்தப் பாடலில் ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த. சிந்தனையினைத் தாங்கி நிற்கிறது என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இறைவனை நண்பன் என்று அழைக்கின்ற முறை ஆன்மீகத் துறையில் தொன்றுதொட்டு இருந்து வருவதாகும்.

வழிபாடு செய்கின்ற அன்பர்கள் இறை வன் சந்நிதானத்தில் நின்றுகொண்டு மனதில் உள்ள அத்தனை எண்ணங்களையும் திறந்து பேச வேண்டும்.