பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

நட்பின் சிறப்பு

ஒருவன் தன் மனத்தில் உள்ளதை எல்லாம் அப்படியே மற்றவரிடத்தில் சொல்லிவிட முடியாது. அண்ணன் தம்பிகளிடத்தில் சிலவற்றைத்தான் சொல்லலாம். அது போலவே, தாயாரிடத்திலும் சில கருத்துக்களைத் தான் சொல்லலாம். சிலவற்றைச் சொல்ல முடியாது. மனைவி யிடத்திலும் சில செய்திகளைத்தான் பேசலாம்; எல்லாவற்றையும் சொல்ல முடியாது; சிலவற்றைச் சொல்லவும் கூடாது. பயந்து விடுவாள்!

தகப்பனாரிடத்திலும் மனத்திலுள்ள எல்லா எண்ணங்களையும் சொல்லிவிட முடியாது. உதாரணமாக, ஒன்றை நினைத்துப் பார்க்கலாம்...

ஒரு பையனுக்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டால், தன்னுடைய தகப்பனாரிடம் நேரிடையாகவா சொல்லுவான்?

“அப்பா, எனக்குக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. சீக்கிரம் செய்து வைத்தால் நல்லது. என் குணம் தான் உங்களுக்குத் தெரியுமே... என்ற தோரணையில் எந்தப் பையனாவது தகப்பனாரிடத்தில் பேசுவானா? அப்படி அவன் மனத்தில் வந்துவிட்ட வேகத்தினையும் வெளியிட்டுச் சொல்வதற்கு அவனுடைய நண்பனைத்தான் தேடுவான்.

நண்பர் ஒருவரோடொருவர் கலந்து பேசுகின்ற பொழுது எத்தனையோ வகையான---எத்தனையோ விதமான செய்திகளையெல்லாம் பேசிக் கொள்வதைப் பார்க்கிறோம். நட்பு என்ற சொல்லுக்குள் அவ்வளவு அடங்கியிருக்கிறது!