பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒரே ஒரு நூல்

இந்தக் காலத்திலே சிறந்த-பேரறிஞர்களாகப் படித்தவர்களாக இருப்பவர்களில், 'நான் ஒரே ஒரு புத்தகம் தான் எழுதினேன்' என்று சொல்லக் கூடியவர்களைப் பார்க்க. முடியாது. சிலர் பத்துப் புத்தகங்கள் எழுதுகிறார்கள்.. பலர் ஐம்பது புத்தகங்கள் எழுதுகிறார்கள். சிலர் எண்ணிறந்த நூல்களை எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். அது ஒருவகையான புத்திசாலித்தனம் தான்.

ஆனால் திருவள்ளுவர் வாழ்நாள் முழுக்க ஒரே ஒரு நூல்தான் எழுதியிருக்கிறார். அப்படியென்றால் அவர் எவ்வளவு சிந்தித்துச் சிந்தித்து எழுதியிருக்க வேண்டும். அதனால் தான் குறட்பாக்களைப் படித்துவிட்டு நமக்கு அர்த்தம் தெரிந்துவிட்டது என்று இருந்து விடக்கூடாது. அந்தக் காலத்திலேயே பல பெரியவர்கள் குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள். அதனுடைய அர்த்தத்தைச் சிந்தித்துத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

நூல் வகைகள்

ஏனென்றால், சில நூல்களைப் பற்றிச் சிந்தனை செய்யவே வேண்டாம். சில நூல்கள் படித்தவுடனேயே விளங்கும். சில நூல்களைப் படித்துவிட்டு ஆழமாகச் சிந்திக்க வேண்டும். பூமியிலே விளைகின்ற பொருட்களிலே சில பொருட்கள் பூமிக்கு மேலேயே விளையும். கத்திரிக்காய், வாழைக்காய், கீரை இவையெல்லாம் பூமிக்கு மேலே தெரியும். சில மண்ணுக்குள்ளேயே உண்டாகி இருக்கும். அவற்றை நாம் தோண்டி எடுக்க வேண்டும், அது போல, நாம் படிக்கும் நூல்களிலே சில ஒருமுறை படித்தால் போதாது. மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்தால் தான் அதன் பொருள் விளங்கும்.