பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

"ஏ! மனிதனே! எப்படியோ ஒரு முறை தவறு செய்தாலும், மறு முறையும் தவறு செய்யக் கூடாது. உன்னுடைய அறிவின் துணை கொண்டு, திருந்திக்கொள்ள வேண்டும்."

அறிவு இல்லாமை

ஒரு மிருகம் கடைவீதியில் போய்க் கொண்டிருக்கிறது. பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்ற கடை ஒன்றை அதன் கண்கள் பார்க்கின்றன. பழங்களைத் தின்னுவதற்கு அந்த மாடு, செல்லுகிறது. அதனுடைய வாய் பழங்களைத் தின்னுகிறது . உடம்பு கடைக்காரர் கொடுப்பதை வாங்கிக் கொண்டு ஓடுகிறது. அறிவு இல்லாததினால் இந்தப் பெரிய குற்றத்தை அந்த மிருகம் செய்கிறது.

கடைவீதியில் நடந்து கொண்டிருந்த ஒருவனுடைய கண்கள் பழக் கடையில் தொங்கிக் கொண்டிருக்கும் பழங்களைப் பார்க்கின்றன. அவன் நாக்கில் தண்ணீர் ஊறுகிறது. அவன் மனம் பழங்களைச் சாப்பிடலாம் என்று நினைக்கிறது. ஆனால் அவனுடைய அறிவு "பணம் இல்லை போகாதே” என்று சொல்லுகிறது.

வாழ்க்கையில் பற்பல ஆழ்ந்த பொருட்களை நாம் கற்றுத் தெரிந்து கொள்ள வாய்ப்புகள் இல்லையென்றாலும், சிலவற்றையாவது தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதாகும்.

நம் உள்ளத்தின் உள்ளேயே செயல்படுகின்றவற்றை 'அந்தக்கரணங்கள்' என்று கூறுவார்கள். அவைகள்தாம் முறையே, மனம்--புத்தி---சித்தம்---அகங்காரம் என்பனவாகும்.

மனம் என்பது --- ஒன்றினை நினைக்கும்.
புத்தி என்பது --- அதற்கு உருவம் கற்பிக்கும்.
சித்தம் என்பது ---- அதனைப் பற்றிக் கொள்ளும்.
அகங்காரம் என்பது ---- அதனைச் செயல்படுத்தும்.