பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

தேசியம், சமதர்மம், பொதுவுடைமை இவை போன்ற இயக்கங்கள் ஒவ்வொன்றும் தமிழன் இதயத்தைக் கவர்த்தன, அவன் தன்னலமறந்து, தன் நிலையழிந்து, தியாகத்தில் முந்தி குதித்தான், முனைந்து பங்கு கொண்டான். ஆனால் இவ்வியக்கங் களெதுவும் அவனை குழ்ந்துள்ள அடிமைக் கவசங் களை ஊடுறுவ முடியவில்லை. ஏறுவோர் ஏற உதவும் ஏணி அவன்; ஏணி யிருந்தபடி இருப்பதுபோல், ஏறு வோர் தொகையால் நலிவதுபோல் அவன் இருந்து நலிந்தார். இந்நிலை ஏன்?

பொதுநலனுக்கு தானுழைத்தால் பொதுநலத் தில் தனக்கும் பங்கு இருப்பது உறுதி என அவன் எண்ணினான். பிறர் நலத்துக்குத் தான் உழைப்பது பெருமை; தன்நலத்தைப் பிறர் கவனிக்கும் என்று அவன் இருந்தான்.

தொழிலாளி தன் கடமை செய்துவிட்டு, உரிமைகளை முதலாளி தருவான் என்று இருந்தால் அவன் கதி என்ன? அடிமை அல்லது வேலையாள் தன் கடமை செய்துவிட்டால் முதலாளி தன்னையும் ஒரு முதலாளியாக நடத்துவான் என்று எதிர்பார்க்க முடியுமா?

பிறநாடுகள், மக்கள் அடிமைத்தனம் நீங்கினால், தன் அடிமைத்தனமும் நீங்கும் என நினைத்தான்.