பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

பெரும்பாலான மக்கள் உலக இன்பங்களைத் துறந்து, எளிய உடையணிந்து, பஜனைப் பாட்டுகளைத் தவிர, வேறு பாட்டுக்களைப் பாடாதவர்களாய் நடந்து வந்தார்கள். சாவனரோலாவின் கொள்கை வெறி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேலோங்கி வளர்ந்து வந்தது. கடைசியில், சிற்றின்பம் பற்றிய புத்தகங்களையும் பாட்டுக்களையும். தீய காம உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய கலைகளையும் பாடல்களையும், தேடிப்பிடித்துத் தீயிலிட்டு அழிக்கும்படி தம் சீடகோடிகளுக்கு உபதேசம் செய்தார். மாயைகளை எரிக்க வேண்டுமென்ற இந்த இயக்கத்தால், உயர்ந்த மதிப்புக்குரிய பல கலைநூல்கள் அழிந்து போயின.

அவருடைய சீர்திருத்த வேகம் இந்த அளவுக்கு முற்றியதும், யாருடனும் இணங்கிப் போகாத அகம்பாவ குணமும் சாவனரோலாவுக்கு நாட்டிலே பல எதிரிகளை உண்டாக்கிவிட்டது. நகரமக்களுக்குப் பரிசுத்த பக்திக் கொள்கையிலே அலுப்புத் தட்டியது. அந்தச் சமயத்தில் பிளாரென்சில் ஒரு கொள்ளை நோய் பரவியது. மெடிசி பரம்பரையைப் பின்பற்றுவோர் பலர் இறந்தனர். இப்படிப்பட்ட பல துன்பங்களும் ஏற்பட்டதால் அந்தப் புதிய சீர்திருத்தவாதிக்கு எதிராக எங்கும் அதிருப்தி பரவியது. அவர் தம் போதனைகளை, ஆயுத பாணிகளான காவல்வீரர்கள் புடைசூழ நடத்தவேண்டி வந்தது. கடைசியில் தங்கள் கொள்கையை மெய்ப்பிப்பதற்காக அவருடன் தீப்புகுந்து காண்பிப்பதாக அவருடைய சீடகோடிகள் அறிவித்தார்கள். இது நடைபெறவில்லை. அவரை ஏமாற்றுக்காரன் என்றும் கோழையென்றும் தூற்றிக் கொண்டு கற்களையும் தீவட்டிகளையும் கொண்டு மக்களில் ஒரு சாரார் அவருடைய மடாலயத்தைத் தாக்கிக் கலகம் விளைவித்தார்கள். பிறகு அவர் கைது செய்யப்பட்டுப் பல நாட்கள் வரை சித்திரவதை செய்யப்பட்டுக் கடைசியில் தூக்கிலிட்டுத் தீக்கிரையாக்கும்படி தண்டனை பெற்றார். இந்தக் கொடிய தண்டனை 1498-ம் ஆண்டு மே மாதம் 23-ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது.

அவரைப் பற்றி மாக்கியவெல்லி குறிப்பிடும்போது, "அவர் புதிய முறைகளைப் பாழாக்கினார். எப்படியென்றால் மக்கள் கூட்டம் அவரை நம்பாதபோது, நம்பிக்கை உடையவர்களையேனும் உறுதியாக இருக்கும்படிச் செய்ய அவருக்கு வழியில்லை. அல்லது நம்பிக்கையற்றவனிடம்