பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

நம்பிக்கையைப் புகுத்தும் வழியும் அவருக்குத் தெரியவில்லை ” என்கிறான். முடிவாக படை பலமற்ற தீர்க்கதரிசிகள் எக்காலத்திலும் அழிக்கப்பட்டேயிருக்கிறார்கள்: படை பலமுள்ள தீர்க்கதரிசிகளே வெற்றி பெற்றிருக்கிறார்கள்" என்று அந்தக் கருத்துரைக்கு முத்தாய்ப்பு வைக்கிறான்.

மாக்கியவெல்லியின் இல்லற வாழ்க்கை நன்றாக நடந்தது என்று சொல்லலாம். ஏனெனில் அவன் அன்புடைய மனைவியைப் பெற்றிருந்தான். அவள் தன் கணவனை மிகவும் மேலாக மதித்து வந்தாள். அவள் பெயர் மாதியெட்டாகோர்சினி என்பது. மாக்கியவெல்லி அவளை அடிக்கடி வம்புக்கிழுத்து, அவள் கோபம் கொள்வதைப் பார்த்து மகிழ்வது வழக்கமாயிருந்து வந்திருக்கிறது.

மாக்கியவெல்லிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்திருக்கிறார்கள். மகன் பிறந்தபோது மாக்கியவெல்லி அரசாங்க அலுவலாக ரோமாபுரிக்குப் போயிருந்தான். அப்போது அவன் மனைவி அவனுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து அவள் அவனை எவ்வளவு மதித்தாள் என்பதும், அவனிடம் எவ்வளவு அன்பு கொண்டிருந்தாள் என்பதும் புலப்படுகின்றன. அவள் தன் கடிதத்தில் குழந்தையைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறாள்.

"அவன் உங்களைப் போலவே இருக்கிறான். பனியைப் போன்ற வெண்மையான உடலும், கருப்பு வெல்வெட்டைப் போன்ற தலையும், உங்களுக்கிருப்பது போலவே உடல் முழுதும் மயிர் வளர்ந்தும் இருக்கிறான். அவன் அப்படியே உங்களை உரித்து வைத்தாற்போல் இருப்பதால் அவனை அழகான பையன் என்றே சொல்லத் தோன்றுகிறது. அவனைப் பார்த்தால் ஒரு வருஷத்துப் பிள்ளை என்று சொல்லுவீர்கள்! (அவ்வளவு ஊட்டமான பிள்ளை) அவன் பிறப்பதற்கு முன்னாலேயே கண்களைத் திறந்து கொண்டு விட்டான். பிறந்தவுடன் வீட்டை மேலும் கீழுமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டான்".

மாக்கியவெல்லி 1494 -ஆம் ஆண்டு தன் இருபத்தைந்தாவது வயதில் பொதுவாழ்வில் ஈடுபட்டான். பொது வாழ்வில் புகுந்த நான்கே ஆண்டுகளில் அவன் குடியரசு அரசாங்கத்தின் செயலாளன் (Secretary) ஆகவும், இரண்டாவது ஆலோசனைத் தலைவன் ஆகவும் வந்து விட்டான். 1498-ஆம் ஆண்டில் ஏற்ற இந்தப் பதவியில்