பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

கவர்ச்சியானவனாக இருந்துவிட்டால், நாம் பாடுபட வேறொருவன் பலனடைந்ததாக முடிந்துவிடாதோ? சொல்லுமையா!

கலி : நீ சொல்லுவதும் சரிதான். ஆனால், வேறு ஏதாவது வழியிருக்கிறதா? அந்தப் பேரழகுப் பெண்மணியை அடைவதற்காக நான் கொள்ளை, கொலை எதுவும் செய்யச் சித்தமாயிருக்கிறேன். அவளையடையாவிட்டால் நான் செத்துப்போய் விடுவேன்.

லிகு : இப்படியெல்லாம் பேசாதிரய்யா! கொஞ்சம் அமைதியாயிரும். என்னால் முடிந்தவரை பார்க்கிறேன்.

கலி : உன்னைப் போன்ற தரகர்கள் ஏமாற்றியே பிழைப்பவர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் நான் உன்னைப் பரிபூரணமாக நம்புகிறேன்.

லிகு : இப்படியெல்லாம் நீர் அவநம்பிக்கை கொள்ளக் கூடாது. முதலில் விஷயத்தைக்கேளும், அவளுடைய புருஷன் மெசர் நிக்கியா பிரபு எந்தத் திர்த்த யாத்திரை ஸ்தலம் நல்ல பலனளிக்குமென்று கேட்டுத் தெரிந்து கொள்ள ஒரு வைத்தியரைப் பார்த்துவரும்படி என்னை அனுப்பி இருக்கிறார். நான் சொல்லுகிறபடி நீர் இப்போது நடக்க வேண்டும். நீர் வைத்தியம் படித்தவரென்றும், பாரீஸ் பட்டணத்தில் தொழில் நடத்தியதாகவும் கூறவேண்டும். நீர் தான் படித்திருக்கிறீரே, ஐயா, கொஞ்சம் லத்தின் வார்த்தைகளை ஊடே ஊடே நுழைத்துப் பேசினால் போதும், அவர் அப்படியே நம்பிவிடுவார்.

கலி : அதனால் என்ன பலன் வந்துவிடப் போகிறது?

லிகு : நாம் நினைத்த தீர்த்த யாத்திரை ஸ்தலத்துக்கு அவரைப் போகச் செய்ய முடியும் அல்லது, அதைக்காட்டிலும் மேலான ஒரு திட்டத்தை நாம் முயன்று பார்க்கவும் உதவக்கூடும்.

கலி : என்ன சொல்லுகிறாய்?

லிகு : நீர் என்னை நம்பி இதில் காலை விடுவதானால் சொல்கிறேன். நாளைக் காலையில், உம் எண்ணம் நிறைவேறும்படி செய்து விடுவேன்.