பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


இருவரும் போகிறார்கள். சாமியாரைக்கண்டு, அவருக்கும், தருமத்திற்கும் பணம் கொடுப்பதாகச் சொல்லி பத்தினி லுக்கிரிசியாவிடம் அவள் தங்கள் திட்டப்படி கருப்பவதியாவதில் தவறில்லை என்று சொல்லி ஒப்புக்கொள்ளச் செய்துவிடுகிறார்கள். இதற்கிடையில் பத்தினி, லுக்கிரிசியாவும் அவருடைய தாயார் சோஸ்ட்ராட்டாவும் வருகிறார்கள்.

சோஸ்ட்ராட்டா : அடி பெண்ணே லுக்கிரிசியா! என்னைப்போல் மானம் மரியாதை பார்ப்பவர்கள் இந்த உலகத்திலேயே இல்லை என்பதும் உனக்கு நன்றாகத் தெரியும். நான் உன் நன்மைக்குப் பாதகமாக எதுவும் செய்யமாட்டேன் என்பதும் உனக்கு நன்றாகத் தெரியும். எதற்கும் சாமியாரைப் பார்ப்போம். அவர் இதனால் மனச்சாட்சிக்குப் பாதகமில்லை என்று சொல்லிவிட்டால், பிறகு நீ இதைப்பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை.

லுக்கிரிசியா : இது என்னம்மா விசித்திரமான யோசனை! நான் கற்பிழக்கவேண்டுமென்பதும், என்னைக் கற்பழித்தவன் எட்டு நாளைக்குள் இறந்துபோக வேண்டுமென்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதா? என்னால் பெண்ணினத்துக்கே அவமானம் ஏற்படுவதா?

சோஸ் : இதோ பார்! எனக்கு அதிகம் பேசத்தெரியாது. டிமோஷியோ சாமியார் தர்மம் தெரிந்த பெரியமகான். அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி செய்யலாம். வா.

லுக்கி : ஆண்டவனே! என் இதயம் வெடித்துவிடும் போலிருக்கிறது!

மதகுரு டிமோஷியோ சாமியார் முன்னிலையில் அவர்கள் வருகிறார்கள்.

டிமோஷியோ : வாருங்கள்! வாருங்கள்! நீங்கள் எதற்காக வருகிறீர்களென்று எனக்கு முன்ன்மேயே தெரியும். நிக்கியா சொல்லி விட்டுப் போய்விட்டார். நான் நம் மதநூல்கள் எல்லாவற்றையும் புரட்டிப் பார்த்துவிட்டேன். முடிவு நமக்குச் சாதகமாகவேயிருக்கிறது.

லுக்கி : குருதேவரே! உண்மையில் தான் சொல்லுகிறீர்களா? அல்லது விளையாடுகிறீர்களா?