பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


டிமோ ; லுக்கிரிசியா! இது என்ன விளையாடக்கூடிய விஷயமா? அல்லது நான் உனக்கு முன்பின் தெரியாத ஆளா?

லுக்கி : இல்லை, இந்த யோசனையே விசித்திரமானதாக இருக்கிறதல்லவா?

டிமோ : இதிலென்ன விசித்திரம். நிச்சயமில்லாத ஒரு தீமைக்குப் பயந்து நிச்சயமான நன்மையை அடையாமல் இருந்துவிடக்கூடாது என்கிறது திருநூல். உன் விஷயத்தை எண்ணிப் பார்ப்போம்.

நீ மருந்தை உட்கொண்ட பின், உன்னோடு முதன் முதலில் மகிழ்ந்திருப்பவன் எட்டு நாளைக்குள் இறந்து போவான் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை அவன் இறந்து போகாமலும் இருக்கலாம். ஆண்டவனுடைய அருள் அப்படி. ஆனால், எப்படியும் உனக்குப் பிள்ளைப்பேறு உண்டு எனபது நிச்சயம். இந்த நிச்சயமான நன்மையை அடைய அந்த நிச்சயமற்ற பாவத்தை எண்ணிப் பயப்படலாமா?... கற்புப் பற்றி நீ பயப்பட்டால் அதற்கு நான் சமாதானம் சொல்கிறேன். உள்ளத் தூய்மைதான் கற்பே தவிர உடல் தூய்மையல்ல. அப்படியே உடல் தூய்மை கெடுகிறதென்று எண்ணினாலும், உன் கணவன் வெறுப்படையும்படி நடந்து கொள்ளவில்லை. அவனை மகிழ்விக்கவே அவ்வாறு செய்யப்போகிறாய். ஆகவே கணவனை மனநிறைவு கொள்ளச் செய்வதால் உனக்கு சொர்க்கத்தில் இடம் பதிவு செய்யப்படுகிறது.

லுக்கிரிசியா : குருதேவரே! நீங்கள் என்னதான் சொல்லுகிறீர்கள்?

டிமோஷியோ : உன் கணவன் விருப்பத்தை நிறைவேற்று. அதனால் ஏற்படக்கூடிய புண்ணியம் பெரிது. பாவமோ, வெள்ளிக்கிழமை மாமிசம் சாப்பிடுவதைக் காட்டிலும் அற்பமானது. ஒருவேளை தீர்த்தம் குடித்தால் அந்தப் பாவம் தீர்ந்து போய்விடும்.

லுக்கிரிசியா: குருதேவரே! நீங்கள் என்னை எங்கே கொண்டு செல்லுகிறீர்கள்?

டிமோஷியோ : ஆண்டவன் அருளுக்குப் பாத்திரமாகும் வழியில் தான் குழந்தாய்!மாக் - 9