பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

புகலியானோவுக்கு அதைக் கொண்டுபோய் அங்கே அதன் கடிவாளத்தையும் கழுத்துக்கட்டையும் அவிழ்த்து விட்டுவிடச்சொல். அது தனக்குப் பிரியமான இடத்தில், தன் வயிற்றுக்கு வேண்டியதைச் சாப்பிட்டுச் சுற்றித்திரிந்து பைத்தியம் மாறட்டும். அங்கே பெரிய வயல் வெளிகள் இருக்கின்றன. அதுவோ சின்னஞ்சிறு கோவேறு கழுதைதான். அதனால் யாருக்கும் கேடுவந்து விடப் போவதில்லை. அதைப்பற்றி நாம் கவலைப்படாமல், அது எப்படித் திரிகிறது என்று கவனித்து வரலாம். அதனுடைய மனம் சரிப்பட்டு விட்டால் அதன் பிறகு மீண்டும் அதைப் பிடிக்க முயலலாம்.

மற்ற குதிரைகளை லோபோலிகிசோ சொல்கிறபடி செய். அவன் மறுபடி நலமாக இருப்பதையும், குதிரைகளை விற்று விட்டதையும் அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். அவற்றால் நமக்குச் செலவே ஏற்பட்டு வந்தபடியால் அவன் செய்தது சரியென்றே நினைக்கிறேன். ஆனால், அவன் எனக்கு எழுதிக் கேட்காமல் செய்தது தான் எனக்குக் கோபத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்குகிறது.

உன் தாய் மாரியாட்டாவுக்கு என் அன்பைத் தெரிவி. நாளுக்கு நாள் நான் இங்கிருந்து புறப்பட வேண்டிய நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறேன், என்பதையும் அவளுக்குச் சொல். பிளாரென்சுக்குத் திரும்பி வர வேண்டும் என்று இப்பொழுது நான் கொண்டிருக்கும் ஆவலைப்போல் எப்போதும் நான் ஆசைப்பட்டதில்லை. துரதிர்ஷ்டவசமாக நான் இது குறித்து எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். அவள் என்ன கேள்விப்பட்டாலும் நல்ல சந்தோஷத்தோடு இருக்க வேண்டும் என்று அவளுக்குச் சொல். எதுவும் மோசமாக நடப்பதற்கு முன்னால் நான் வீட்டுக்கு வந்து விடுவேன்.

பாக்சினாவுக்கும். பியாரோவுக்கும், டாட்டோ இன்னும் அங்கிருந்தால் அவனுக்கும் எல்லோருக்கும் முத்தம். அவன் கண்கள் எப்படியிருக்கின்றன என்று தெரிவிப்பாய் என்று எண்ணுகிறேன். எல்லோரும் . நீங்கள் எல்லோரும் சந்தோஷமாயிருங்கள். கூடுமான வரை குறைத்துச் செலவழியுங்கள். பெர்னாடோவை கவனமாக நடந்து கொள்ளச் சொல். இரண்டு வாரமாக இரண்டு முறை அவனுக்கு எழுதிவிட்டேன். பதிலேயில்லை. ஆண்டவர் உங்கள் அனைவரையும் காப்பாற்றி அருள் புரிவாராக!

நிக்கோலோ மாக்கியவெல்லி.