பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

மக்களுக்கு நன்மை செய்து வருவதன் மூலம் அவன் தன் நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். கோழைத் தனத்தினாலோ, சரியான யோசனையில்லாததினாலோ ஒரே மூச்சில் தான் செய்ய வேண்டிய கொடுமைகளைச் செய்து முடிக்காதவன், தினந்தோறும் பாக்கியிருக்கின்ற கொடுமைகளைச் செய்வதற்காக வாளுங்கையுமாக இருந்து கொண்டே இருக்க வேண்டியிருப்பதால், அவன் மக்களுடைய அன்பைப் பெறமுடியாது. தனக்குத் தடையாயிருப்பவர்களை யெல்லாம் ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிட்டு பிறகு கொஞ்சங்கொஞ்சமாக மக்களுக்கு நன்மைகளைச் செய்து வந்தால், அவற்றைப் படிப்படியாக அனுபவித்து வரக் கூடிய அவர்கள் பழைய பாதகத்தை மறந்து விடுவார்கள். மக்களோடு ஒன்றி வாழுகிற அரசனை எந்த நல்ல அல்லது தீய நிகழ்ச்சிகளும் சாய்த்து விட முடியாது.

மக்கள் ஆதரவால் அரசர் ஆதல்:

கொலை அல்லது கொடுமையால் அரசராவது தவிர மக்கள் ஆதரவால் அரசர் ஆவதும் ஒரு வழியாகும். முழுத்தகுதியோ அல்லது நிறைந்த அதிர்ஷ்டமோ இருந்தால் மட்டும் இந்த நிலையை அடைந்து விட முடியாது. அதிர்ஷ்டத்துடன் தந்திரமும் இருக்க வேண்டும்!

ஒவ்வொரு நகரிலும் இரண்டு கட்சிகள் ஏற்படுவது இயல்பு. ஒன்று மேன்மக்களுடைய கொடுமையைத் தவிர்க்க நினைக்கும் பொதுமக்கள் கட்சி. மற்றொன்று பொதுமக்களை ஒடுக்க நினைக்கும் மேன்மக்கள் கட்சி. இந்த இரு கட்சிகளின் மோதுதலின் விளைவாக ஓர் அரசனைக் கொண்ட முழுமையான அரசாங்கம் அல்லது மக்களின் சுயாதீனம் அல்லது கட்டுக்கடங்காத நிலை ஆகிய மூன்றில் ஒன்று ஏற்படும். முதலாவதாகச் சொன்ன முழுமையான அரசாங்கம் ஏற்படுகின்ற பொழுது நாட்டில் எந்தக் கட்சி ஓங்கியிருக்கிறதோ அந்தக் கட்சி தன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தங்கள் கொள்கையை ஆதரிக்கக் கூடிய ஒருவனை நாட்டின் அரசனாக்கி விடுவார்கள்.

மேன்மக்கள் ஆதரவால் அரசன் ஆனவன், பொதுமக்கள் உதவியால் அரசன் ஆனவனைக் காட்டிலும் தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு அதிகக் கஷ்டப்பட நேரிடும்.