பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

அரசாங்கத்தில் அவனுடைய வார்த்தைக்கு மறுப்பு இருக்கக் கூடாது. அவன் தன் முடிவுகளைக் கடைசிவரை உறுதியாகக் கொள்ள வேண்டும். அவனை ஏமாற்றி விடலாமென்றோ அல்லது மோசம் செய்துவிடலாம் என்றோ யாருக்கும் எண்ணந் தோன்றும்படி உறுதியற்றவனாய் இருக்கக் கூடாது.

தன்னைப் பற்றி ஒரு நல்லெண்ணத்தை உண்டாக்குகிற அரசன் பெருங்கீர்த்தியடைகிறான். பெருங் கீர்த்தியுள்ள அரசன் தன் குடிமக்களால் போற்றப்படுவான். ஆகையால் அவனுக்கு எதிராக சதி செய்வதும், சண்டை புரிவதும் எளிய காரியமல்ல. ஓர் அரசனுக்கு இருக்கக்கூடிய பயமெல்லாம் இரண்டே வகையானவை தாம். ஒன்று தன் குடிமக்களிடையே தனக்கெதிராகச் சதி செய்யப்படுவது; மற்றொன்று, அயலரசர்களால் தாக்கப்படுவது. நல்ல படையமைப்பையும் நல்ல நண்பர்களையும் உடைய அரசன் வெளித்தாக்குதலுக்கு அஞ்சத் தேவையில்லை. சூழ்ச்சிகள் தவிர்க்கப்படுவதற்குச் சரியான வழி மக்கள் கூட்டத்தால் தான் வெறுக்கப்படாமல் செய்வதேயாகும்.

சாதாரணமாகச் சதியில் இறங்குபவன் எவனும் என்ன நினைப்பானென்றால், அரசனைக் கொன்றுவிட்டால் தான் மக்களைத் திருப்தியடையச் செய்துவிடலாம் என்றுதான்! ஆனால் அதே காரியத்தைத் தான் செய்தால், மக்களுக்கு குற்றம் செய்வதாக இருக்குமானால், எவனும் சதி செய்யப் பயப்படுவான்.

சதி செய்கிறவன் மனதில் அச்சமும், சந்தேகமும், பொறாமையும், எப்பொழுதும் குறுகுறுக்கச் செய்து கொண்டிருக்கும். தண்டனை பற்றிய பயமுமே குடி கொண்டிருக்கும். அரசனிடத்திலோ, மிகப் பெரிய அரசாங்கமும், நீதி முறைகளும், நண்பர்களின் பாதுகாப்பும், ராஜ்ய பாதுகாப்பும் எல்லாம் இருக்கின்றன. இத்துடன் மக்களின் நல்லெண்ணமும் சேர்ந்துவிட்டால் எவருக்கும் சதி செய்ய வேண்டுமென்ற எண்ணமே தோன்ற மார்க்கமில்லை. சதி செய்பவன் ராஜவிசுவாசமுள்ள மக்களையும் தன் எதிரிகளாக மதிக்க வேண்டிய நிலை இருப்பதால், சதி கண்டு பிடிக்கப்பட்டுத் தண்டனையடையும் சமயத்தில், புகலடையும் இடமில்லாமல் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். ஆகையால் சதியைப் பற்றி நினைக்கவேமாட்டான்.