பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

தங்களிடம் இல்லாத அதிகாரத்தைத் தேடிக்கொள்ள முயலுகின்றவர்களா, அல்லது ஏற்கனவே தங்களிடம் உள்ள அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள விரும்புகின்றவர்களா, இவர்களில் யார் குறைந்த ஆபத்தானவர்கள் என்று பார்க்க வேண்டும். கையில் அதிகாரமுள்ளவர்களால் தான் பெரும் தொல்லைகள் அடிக்கடி ஏற்படுகின்றன. தங்கள் அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சமும் அவநம்பிக்கையும் இருப்பதன் காரணமாக அவர்கள் மேன்மேலும் அதைத் தேடிக் கொள்ள முயலுகிறார்கள். இன்னும் மோசமானதென்னவென்றால், பிரபுக்களும் பணக்காரர்களும் தங்கள் அகங்காரத்தினாலும் இறுமாப்பினாலும், உயர்ந்த குடிப்பிறப்போ, செல்வமோ இல்லாதவர்களுடைய நெஞ்சிலே, அவற்றைப் பெற வேண்டுமென்ற எண்ணத்தை மட்டுமல்லாமல், அவற்றைஅந்தச் செல்வங்களையும் மரியாதைகளையும் மிக மோசமான நிலையில் அனுபவித்து வரும் அவர்களிடமிருந்து அதைப் பறித்துக்கொண்டு பழிவாங்கிவிட வேண்டுமென்ற விருப்பத்தையும் தூண்டி விடுவதுதான்!

குடியரசில் உரிமையை நிலைநிறுத்தக் குற்றஞ் சாட்டும் வாய்ப்பு இருக்கவேண்டியது இன்றியமையாதது :

பீட்டஸ் லீவியஸ் கொரியோலானசைப் பற்றிக் கூறுகிற நிகழ்ச்சியொன்று நமக்கு ஓர் உண்மையைப் புலப்படுத்துகிறது. ரோமாபுரியில் பஞ்சம் வந்தபோது சிசிலித்தீவிலிருந்து தான்யங்கள் கொண்டுவர ஆட்சிக் குழு ஏற்பாடு செய்திருந்தது. அப்போது கொரியோலானஸ், குடிமக்கள் பிரதிநிதிகளை ஏற்படுத்தியதன் மூலம் அடைந்திருக்கிற அதிகாரத்தைப் பறிப்பதற்கு இது நல்ல சந்தர்ப்பம் என்று ஆட்சிக் குழுவினருக்குக் கூறினான். உணவுப் பொருள் கிடைக்காவிட்டால் - அது வழங்கப்படாவிட்டால், அவர்கள் வழிக்கு வருவார்கள் என்றான். இதைக் கேள்விப்பட்ட மக்கள் கொதித்தெழுந்தார்கள். மக்கள் பிரதிநிதிகள் அவனைத் தங்கள் முன்னிலையில் வந்து குற்றத்திற்குப் பதில் கூறவேண்டும் என்று அவனை அழைத்திராவிட்டால், அவன் படுகொலை செய்யப்பட்டிருப்பான் என்பதோடு பெருங் குழப்பம் உண்டாகியிருக்கும். மக்களுடைய வெறுப்பை வெளிப்படுத்துவதற்கு இப்படிப்பட்ட சட்டரீதியான ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்படாவிட்டால் அவர்கள் சட்டத்தை