பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

செய்வதற்காக! அல்லது, மக்கள் நலமாக வாழக் கூடியபடி ஓர் அரசை நிலை நிறுத்துவதற்காக அந்த அரசன் ஆரம்பத்தில் நிலைமைக்குத் தகுந்தாற்போல் எவ்வளவு கொடுஞ் செயல்களை வேண்டுமானாலும் புரியலாம் என்பதேயாகும்.

உலகத்தில் எத்தனையோ அரசாங்கங்கள் எழுந்தன. அவற்றிலே நல்லனவும் தீயனவும் உண்டு. ஆனால் எந்த அரசாங்கமும் நீடித்து நிலைத்து நின்றதில்லை. இதன் காரணங்களைத் தான் மாக்கியவெல்லி ஆராய்ந்தான். அரசாங்கங்கள் அடிக்கடி மாறுவதால் அந்தந்த மக்கள் சமுதாயங்கள் அல்லலுற்றுத் தட்டுத்தடுமாறி ஒரு நிலையான வாழ்வைப் பெற முடியாமல் அலைக்கழித்து சீர்கெட்டு நசித்துப் போகின்றன. இந்த அவலநிலை அடிக்கடி ஏற்படாமல் இருக்க, நிலையான அரசாங்கங்கள் தேவை. அவை குடியரசாயினும் முடியரசாயினும் நிலைத்து நிற்கக் கூடியனவாக இருக்கவேண்டும். அப்படி அவை நிலைத்து நிற்கக் கூடிய வழிவகைகள் யாவை? இதைத்தான் சிந்தித்தான் மாக்கியவெல்லி.

குடியரசு, முடியரசு எதுவாயினும் அது மக்கள் நன்மை கருதும் அரசாக இருக்க வேண்டும்: மக்கள் நன்மை கருதும் அந்த அரசு நிலைத்து நிற்கவேண்டும் என்பதுதான் மாக்கியவெல்லியின் கொள்கை.

அப்படி ஓர் அரசு நிலைத்து நிற்கக் கூடிய வழிவகைகளைச் சிந்தித்துத்தான் அவன் தன் நூல்களிலே நமக்கு விளக்கிக் காட்டியிருக்கிறான்.

ஓர் அரசு நிலைப்பதற்காக ஒரு சிலரைக் கொல்ல வேண்டிய தேவையிருந்தால் கொல்வது தவறல்ல என்று குறிப்பிடுகின்றான். இப்படி அவன் துணிச்சலாகத் தன் கருத்தைக் கூறுவது தான் சிலர்க்குப் பிடிக்கவில்லை.

மாக்கியவெல்லியைத் தூற்றிய காலம் மறைந்துவிட்டது. அவன் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. ஆனால், இன்று உலகெங்கும் குடியரசாதிக்கம் ஓங்கி வருகின்ற காலமாயிருக்கின்றபடியால், அவனுடைய முடியரசுக் கொள்கைகளை யொருபுறம் ஒதுக்கிவிட்டுக் குடியரசுக் கொள்கைகளை ஏற்றுக் கொள்வோமாக.