சிந்தனைத் துளிகள்
91
806. “கூட்டுறவு, பொருளாதார வளர்ச்சி இயக்கம் மட்டும் அல்ல. அஃது ஒர் ஆன்மீக வளர்ச்சி இயக்கமும் ஆகும்.
807. “எங்கு, பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப் பெறவில்லையோ, அங்கு உழைப்பு முழுமையாகாது, காலக்கேடும் உழைப்புக் கேடும் இருக்கும்.”
808. “உழைப்பு, உழைப்புக்காகவே-வேலை, வேலைக்காகவே என்று செய்தலே ஒழுக்கம்.”
809. “ஒழுக்கத்தின் தாய் நல்ல உழைப்பு.”
810. “அழுக்காறு, ஆணவப் போட்டிகள் ஆக்கத்தைக் கெடுக்கும்.”
811. “நிலம் உழைப்புக்கேற்ற பயனை ஒளிக்காமல் வழங்குகிறது.”
812. “பயன்படுத்தாத நிலை பாழ். பயன்படாத மனிதனும் பாழ்.”
813. “அர்ப்பணிப்பு நிலையில் வாழும் தாவர இனங்கள் போற்றுதலுக்குரியன.”
814. “வேளாண்மையில் நமது முன்னோர் பின் பற்றிய முறைகள் தீமை பயவாது, நலம் செய்தன: அதாவது இயற்கை உரங்கள் எதிர் விளைவுகளை உண்டாக்காது.”
815. “பணம்-ஊக்கத்திலும் பண்பாட்டுக்குரிய அற ஊக்கம் உயர்ந்தது.”
816. “உற்பத்தி நுகர்வுக்கே இலாபத்திற்கு அல்ல.”
817. “நோயின்றி வாழ, காய்கனிகளே சிறந்த உணவு.”