பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

95



851. “எளியர், உயர்வு பாராட்டுதலும், மிக உயர்வுடையோர் தம்மை எளியராக்கிக் கொள்ளுதலும் உலகத்தில் காணப்பெறும் காட்சி.”

852. “உறவை வளர்த்துப் பேணுதல் பெருவாழ் வினைத் தரும்.”

853. “புகழில் மயங்காத மானிடர் இல்லை. புகழ்வதில் தாராளமாக நடந்து கொள்வது உயர்வதற்கு வழி”

854. “உடலோடு முரண்பட்டு விளையாடினால் நோயினால் தண்டித்து விடுகிறது.”

855. “இழிவாக எண்ணி அலட்சியம் செய்தால், எதிர்விளையாக அறிவைத் தருகிறது, உடல்.”

856. “ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய பயனைக் கணக்கிடல் உழைப்பினை ஊக்குவிக்கும்”

857. “இந்திய வாழ்க்கையமைப்பில் ஏற்பட்டுள்ள சாதிப் பிரிவினைகள் எளிதில் நீங்காது. பிரிவினை வழிப்பட்ட பகையைத் தணித்தாலே போதும்.”

858. “இன்று பரஸ்பர நம்பிக்கையற்றவர்களே கூட்டாளிகள்.”

859. “அவரவர் வினைவழி அவரவர்” என்ற விதி இம்மியும் பிறழாமல் நிகழ்வதை எஸ்.டி.எஸ்-எம்.ஜி.ஆர். மோதலில் உய்த்துணர முடிகிறது.

860. “தகுதி உடையவர்களைவிடத் தகுதியில்லாதவர்களே உயர விரும்புகின்றனர்.”

861. “ஒவ்வொரு பழக்கமாக நற்பழக்கங்கள் வாழ்க்கையில் உறுதிப்பட்டால்கூட எளிதில் வெற்றி பெறலாம்.”