106
தவத்திரு அடிகளார்
978. “காலத்தை அளந்து செலவழிப்போரே பணத்தை எண்ணி வாங்கும் உரிமையுடையவர் ஆவர்.”
979. “காலங்கடந்த கடமைகள் சுமையாகி விடும்.”
980. “இன்று பட்டங்களுக்கும் பண்பாட்டுக்கும் உறவில்லை.”
981. “திட்டமிட்டப் பணிகளுக்குச் செலவழித்தலே முறையாகும்.”
982. “முந்திரிக் கொட்டை போல் துருத்திக்கொண்டு முன்வருபவர்கள், கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்.”
983. “காரிய சாதனையே சாதனை.”
984. “தன்னுடலுக்கு, தானே மருத்துவர்.”
985. “ஆகாததை அறவே மறந்திடுதல் நன்று.”
986. “சாதாரண மனிதன்கூட உடலுழைப்புக்கு கூச்சப்படுகிறான்.”
987. “பள்ளிக் கூடம், திருக்கோயிலைப் போல் பேணப் பெறுதல் வேண்டும்.”
988. “ஆசிரியர்-மாணாக்கர்களின் கூட்டு முயற்சியிலேயே கல்வியின் திறன் அமையும்.”
989. “வாழ்க்கை முழுதும் நூல் படிக்கும் பழக்கம் தொடரின், இன்பம் பயக்கும்.”
990. “மனப்பாடம் மட்டுமே கல்வி என்ற நிலை அமையின், சிந்தனை ஊற்று, தூர்ந்து போகும்.”
991. “நேரிடையாகக் கல்வி போதிப்பதைவிட, செய்முறைகள் மூலம் படிப்பித்தல் நல்லது.”