பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தவத்திரு அடிகளார்



1445. “சிறுபான்மையினர்தான், பெரும்பான்மையினரை அடக்கியாள்கின்றனர். இந்த முரண் பாட்டுக்குக் காரணம் அறிவு பெறுதலுக்கு அனைவருக்கும் சம வாய்ப்பு அமையாமையே யாம்.”

1446. “எப்படியாவது காரியத்தைச் செய்து முடித்தல் என்ற வாழ்க்கை முறை, நன்றன்று. இப்படித்தான் என்று திட்டமிட்டு நெறிமுறைப்படி அமைதல் வேண்டும்.”

1447. “தீமை செய்யாதவர்கள் அனைவரும் நல்லவர்கள் அல்லர்; நன்மை செய்பவர்களே நல்லவர்கள்.”

1448. “உயிருக்கு இன்னல் விளைவிக்கும் பணியை மற்றவர்களிடம் செய்யக் கொடுப்பதே மனித இயற்கை.”

1449. “வேலை வாங்கும் உரிமையைப் போலவே வாழ்வளிக்கும் கடமையை மேற்கொள்ளவேண்டும்.”

1450. “காலம், ஆற்றல், பணி முதலியவற்றை முறைப்படுத்திச் செய்தால், பணிகளையும் நிறைய செய்யலாம்; மிகுதியும் பயனுடையதாகவும் செய்யலாம்; தப்பாமலும் செய்யலாம்.”

1451. “இப்படித்தான் வாழ்வேன் என்று உணர்வு பூர்வமாக முடிவெடுத்துவிட்டால் நமது மூளையும் உடலும் இயல்பாகவே ஒத்துழைக்கும்.”

1452. “பலவீனமானவர்களால் சமுதாயம் சீர் கேடடைவதைவிட, பலமானவர்களுடைய பலம், பலவீனத்தை ஈடுசெய்யக் கூடியதாக சமுதாய உணர்வுடன் வளரவில்லை. பழுதான இயந்திரத்தை, பழுதாகாத இயந்திரம் இழுத்துப் போகவில்லையே!