பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

149



1453. “சிலர் நல்லவர்களே! திறமை இன்மையால் கெட்டவர்கள் போலத் தெரிவர்.”

1454. “விரைவு உணர்வு வேறு; அவசரப்படுதல் வேறு. விரைவு உணர்வு காரிய சாதனையைத் தரும். அவசரப்படுதல் காரியக் கேடுகளையே தரும்.”

1455. “சுறுசுறுப்பு வேறு, பரபரப்பு வேறு. சுறு சுறுப்பு நல்லது. பரபரப்பு நல்லதல்ல.”

1456. “இன்றைய குடும்பங்களில் பல, உடல் வயப்பட்டவை; உணர்வுவயப்பட்டவை அல்ல.”

1457. “சமமற்ற நிலையில் அன்பு தோழமை, சன நாயகம் சிறப்பதில்லை.”

1458. “ஒத்த நோக்கில்லாதார் நட்பினராய் இருத்தல் அரிது.”

1459. “கழுவாய் முறையாக அமைந்தால் நோய் இல்லை; பகை இல்லை!”

1460. “வல்லாங்கு வாழ்பவர் தொடர்ந்து மற்றவர் வாழ்க்கைக்குத் தீங்கு செய்வதைத் தடுக்க இயலாத அரசு, அரசல்ல.”

1461. “அநீதியை எதிர்க்காமல் ஒதுங்கி வாழ்பவர்களும் அநியாயக்காரர்களே!”

1462. “அரசாங்கப் பணிமனைகளிலும் எளிய உழைப்பாளிகளுக்கு உத்தரவாதம் இல்லை.”

1463. “சோவியத்தில் லஞ்சம் வாங்கினான்! இது எப்பொழுதோ நிகழ்வது. ஆனால் நம் நாட்டிலோ லஞ்சம் தேசியமயப்படுத்தியாயிற்று.”

1464. “பலரை மொட்டையடித்து வாழ்பவ்ர்கூட திருப்பதிக்கு மொட்டை போடுகின்றனர்! பாபக் கழுவாய் போலும்.”