பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

155



1518. “நுகர்தல் வாழ்க்கையின் கடப்பாடுகளில் ஒன்று; உரிய விலை கொடுக்காமல் நுகர்தல் ஒழுக்கக் கேடு.”

1519. “மற்ற சமயங்களுக்கு வாய்த்திருப்பது போல, அயல் மூலதனங்கள் நமக்கு இல்லை. நமது மூலதனமும்கூட சுரண்டப்படுகிறதே தவிர-வளர்க்கப் பெறவில்லை.”

1520. “உழைக்காமல்- சமூக உழைப்பு இல்லாமல் வாழ்பவர்களும்கூட ஒருவகையில் சுரண்டல் செய்பவர்களேயாவர்.”

1521. “பூரணத்துவமான உழைப்பு தோன்றாத வரையில் வையகத்தை வறுமையிலிருந்து மீட்க முடியாது.”

1522. “கவனமாக - தொடர்ச்சியாகச் செய்யப் பெறும் பணிகளே பயன்தரும்.”

1523. “சுதந்தரம்-பலர் வாழ்க்கையில் ஒளியைப் பரப்பவில்லை.”

1524. “மனிதகுலம் வாழத் தெரிந்து கொண்டால் பருவ காலமும் ஏவல் செய்யும்.”

1525. “குழந்தையின் அருமையையும், பொறுப்பையும் உணர்பவர்கள்-குடும்பத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திக் கொள்வர்.”

1526. “இன்பம் என்பது கலவியொன்றில்தான் என்று வாழும் வாழ்க்கை மிருக வாழ்க்கை.”

1527. “ஒரு பெருங்கொலைக்குப் பிறகு கூட ஒரு இளைஞனைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறார்கள்-இங்கு மருத்துவமனையில்தான் தலைவர் உள்ளார்-அதற்குள் சிண்டுபிடிச்சண்டை!”