பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தவத்திரு அடிகளார்



1594. “இந்திய சமூக வாழ்க்கையில்-வைதிகச் சடங்குகளுக்கு உள்ள செல்வாக்கு குறையவில்லை.”

1595. “கிறிஸ்தவர்களைப் போல அணி அணி யாக ஆர்வத்துடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்வோர் கிடைத்தாலே வளரலாம்.”

1596. “நன்றி-விசுவாசம் சொல்லால் காட்டப் பெறுவது அல்ல; செயற்பாடுகளின் மூலம் காட்டப் பெறுவது.”

1597. “ஒழுங்கமைவுடைய வாழ்க்கைக்குப் போராடாதவர்கள்-வெற்றி பொருந்திய வாழ்க்கையைப் பெற முடியாது.”

1598. “சாமார்த்தியசாலியான ஒருவன் தனக்கு சரிப்பட்டு வராததை எல்லாம் உலகத்திற்கே சரிப்பட்டு வராது என்று கூறிவிடுவான்.”

1599. “இன்று, கூட்டுறவு என்பது சாதாரண பணப்பரிமாற்றம் மட்டுமே செய்துவருகிறது. இது தவறு. இதனுடன் ஆளுமை, பண்பாடு ஆகிய பரிமாற்றங்களுக்கும்-வளர்ச்சிக்கும் கூட்டுறவு பயன்படும். பயன்படும்படி இயக்கவேண்டும்.”

1600. “பலர், கூடித் தொழில் செய்வது என்றால் ஒரே வேலையை பலர்செய்வது என்பதல்ல. அவரவர்க்குள்ள பொறுப்புகளை ஒத்திசைந்து செய்வது என்பது கருத்து.”

1601. “முறைப்படி செய்யாத நல்ல காரியம்கூட முழுப் பயனைத் தராதுபோகும்.”

1602. “பலர் நம்முடைய நோக்கத்திற்கு இசைந்து வராமல்; ஆனால் நமது படகிலேயே பயணம் செய்கின்றனர். இது ஒரு விசித்திரமான நிலை.”