சிந்தனைத் துளிகள்
165
1629. “அலுவலக நடைமுறைகள், படிப்பினைகள் வழி வந்தவையே! இவை பின்பற்றப்படாது போனால் தோல்வியே வரும்.”
1630. “கணப் பொழுதும் மாறும் உலகியலின் மாற்றங்கள் தவிர்க்க இயலாதன.”
1631. “அரசு, வீட்டு வாசற் படிக்கு வந்தாலும் விழிப்பில்லாதவர் பலர் உண்டு.”
1632. “இன்றைய மனிதர் பலர் தேவைக்கு ஆட்பட்டு ஆசைப்படுவதைவிட அழுக்காற்றுக்கு ஆட்பட்டே ஆசைப்படுகின்றனர்.”
1633. “பழகும் பண்பு அறியாதவர்கள் மேலதிகாரிகளாக வந்து விட்டால் அவர்களோடு ஒத்திசைந்து பணி செய்தல் அரிது.”
1634. “அரசியல் வாதிகள் தங்களுடைய விருப்பங்களை மற்றவர்கள் மீது ஏற்றுவர்.”
1635. “உழைப்பில் பயன்படுத்தப் பெறாத ஆற்றல், நீரிழிவு நோயாகிறது.”
1636. “சிந்தித்துத் திட்டமிட்டால் சென்ற காலத்தில் செய்யப்படாமல் விடுபட்டுப் போனவை எவ்வளவு என்பது தெரியவரும்.”
1637. “ஆசைகள் அளவுக்கு முயற்சி இல்லை.”
1638. “சுதந்தரம் கற்றுக் கொடுத்திருக்கும் ஒரே காரியம் மனுக்கள் எழுதுவதுதான்.”
1639. “கிராமங்கள் தன்னிறைவுடைய குடியரசாக விளங்கவேண்டும்.”
1640. “செய்தவற்றைச் சரிபார்த்தல் என்பது தவிர்க்க முடியாதது."