பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

81



701. “இராமன் தனக்காக நடந்தான். கண்ணன் மற்றவர்களுக்காக நடந்தான்.”

702. “எனக்குத் தெரியும்” என்ற முடிவே அறியாமையின் முகடு.”

703. “ஒருவரிடம் இல்லாத ஒன்றை, அவசியத் தேவை கருதிப் பெற்றால் கையூட்டு; கைமாற்று; தேவையில்லாத ஒன்றைப் பெற்றால் அது அன்பின் நடைமுறை.”

704. “பராமரிக்கப் பெறாத உறவுகள் பழுதுறும்.”

705. “பாஞ்சாலிக்கு - கடைசியில் அழைத்த பிறகு, கண்ணன் உதவி செய்ததற்குக் காரணம் பாஞ்சாலியின் தன்வினை முயற்சி முதிர்ச்சியடையட்டும் என்பதனாலேயாம்.”

706. “தன்வினை முயற்சி முதிர்வடையாதவர்களிடம் பிறவினை முயற்சிகள் தாக்கங்களை ஏற்படுத்திப் பயன்தராது.”

707. “தங்கள் மனைவி, மக்கள், சுற்றம் என்று சுற்றுபவர்கள் உயர்தரக் குணமுடையவராக இருத்தல் இயலாது.”

708. “என்ன-எதற்காகச் சொல்லியிருப்பார் என்று ஆய்வு செய்யாமலே ஒருவர் மீது ஆத்திரப் படுபவர்கள் அகம்பாவிகள். உதவி செய்வதைக் கடமையாக வைக்காமல் கட்டுப்பாடாக ஆக்குவார்கள்.”

709. “பயனுடையதாக ஒருவர் செய்யும் வேலை அமையாதுபோனால், அது விபசாரத்திற்குச் சமம்.”

த-6