பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீறாப்புராணத்தில்
இயற்கை வர்ணனைகள்



டாக்டர் சி பாலசுப்பிரமணியன்

எம். ஏ. எம். லிட்; பிஎச். டி.,

இயற்கையே இறைவன். இறைவனை வணங்குவதால் உண்டாகும் மன அமைதி, இயற்கைக் காட்சிகளைக் காண்பதாலும் உண்டாகிறது. ஓங்கி உயர்ந்த மலை அதில் பொங்கி வீழும் அருவி, சலசலவென ஒடும் தெளிந்த நீரோடை, நீரோடை இருமருங்கும் செழித்து, வானளாவ வளர்ந்துள்ள மரங்கள், பூத்துக் குலுங்கும் பல நிற, பல மண மலர்கள், அங்கே கூடுகட்டி வாழும் பறவைகள்-இவை போன்ற எண்ணற்ற இயற்கைக் காட்சிகளே, அலையும் நம் எண்ணங்களை, ஒருமைப்படுத்தி, உயர்வுபடுத்தும் ஆற்றல் வாய்ந்தனவாய் உள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் மூதாதையர்கள் இவ்வியற்கை எழில் காட்சிகளைத் துய்த்து வாழ்ந்த வாழ்வு, இன்று நமக்குக் கிட்டுவதாக இல்லை

இற்றைமக்கள் வாழும் வாழ்வு இயந்திர வாழ்வு. அன்றாட மக்களின் வாழ்வில் இயற்கை தலைமையான இடம் பெற்றிருந்தது அன்று; மக்களை இயந்திரங்களே ஆட்டி வைப்பது இன்று. டாக்டர் மு.வ. அவர்கள், தாம் இயற்றியுள்ள பழந்தமிழிலக்கியத்தில் இயற்கை என்ற நூலில் முடிவுரையின் கண் வயிற்றை நிரப்பும் கடமையில் தொழிலும் பொருளும் தேடி, ஒடிக்கொண்டே இருக்கின்ற இன்றைய மனிதனுக்கு இயற்கையை மனமார அனுபவிக்க நேரம்தான் இல்லை' என்று கூறிக் கீழ்க்கண்ட வோர்ட்ஸ் வொர்த் அவர்களின் கவிதையை எடுத்துக் காட்டுகிறார்.

'உலகியலில் முழுகிவிட்டோம் உணர்வதற்குப் பொழுதுமில்லை
பலவும் பெற்றழிக்கின்றோம் பாழுக்கே இறைக்கின்றோம்
நமதுடமைச் செல்வமென நம்மைச் சூழ்ந்தினிதிருக்கும்