பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105


வுறுத்துவதாகும். புனிதர் முகம்மது அழைத்திட முழுமதி கடல் வேந்தனுக்குக் கலித்திடும் வெண்தரள மணி முடியாய் தோன்றியது என்கிறார் உமறு.

"......பரவைவேந் தனுக்குவெண் டரள
மணியினில் அமைத்த செழுமுடி நிகர்ப்ப
வந்தது நிறைந்த வெண் மதியம்"[1]

இன்னும் அவ்வாறு தோன்றும் நிலவு, "முகம்மதுவைச் சார்ந்தோரே சொர்க்க பூமி சேர்வர். சாரா தார் கெடு நரகு அடைவர்' என்று உலகிற்கு அறிவிப்பதாகவும் கற்பனை செய்திருக்கிறார் உமறு.

"நெடியவன் படைப்பெப் பொருட்குமுன் னொளியாய்
நின்று பின் அப்துல்லா வயிற்றில்
வடிவுறு அரசா யுதித்தநன் னபியே
முகம்மதே தனியவன் தூதே
படியினும் கலிமாப் பகர்ந்தவர் சுவனப்
பதியடை குவர்பக ராதார்
கெடுநர கடைவர் சரதமென் றெவர்க்கும்
கிளத்திநின்றதுசெ.மு மதியம்" [2]

முகம்மதுவின் முகத்தை மறுவிலா முழுமதிக்கு உவமித்துள்ள உமறு, அவ்வாறே அவர் அவதரித்துள்ள திருநகரில் வாழும் பெண்களின் முகத்தையும், மறுவிலா முழுமதிக்கு உவமித்துக் கூறுவதையும் இங்கே சுட்டவேண்டும்.

உழத்தியர், நாற்று நடும்போது, சிதறும் சேறு, அவர்கள் முகத்தைக் கறைபடுத்துகிறது. கறைபடுமுன், களங்கமில்லா நிலவாய் இருந்த அம்மங்கையர் முகம், சேற்றுக் கறைபட்டமையால், கலங்கமுடைய நிலவை ஒத்து ஒளியுடன் திகழ்கிறது என்கிறார் உமறு,


  1. 1. சீறா. மதியழைப்பித்த படலம் 166
  2. 2. சீறா. மதியழைப்பித்த படலம் 172