பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

நிலம் இல்லை. குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நானிலங்களே இயற்கை நிலங்கள். இயற்கை வறண்டால் குறிஞ்சியும், முல்லையும், மருதமும், நெயதலும் உருமாறி ஏற்படும் வற்றிய நிலமே பாலை. பாலையில் உயிரினங்கள் மகிழ்ந்து வாழ முடியாது; நீரும், உணவும் கிடைக்காமல் உயிரினங்கள் துடிததுச் சாகும். இயற்கையின் வறட்சி, பெரும்பாலும் மழையின்மையாலேயே உண்டாகும். விசும்பின் மழைத்துளி விழாவிடில், மண்ணில் புல் நுனியையும் காண்பது அரிது மழை பெய்யாமல் மாநிலம் பஞ்சத்தால் துடிக்கும் இயற்கையின் வறட்சிக் காட்சிகளையும் உமறு இந்நூலில் வடித்துக் காட்டியுள்ளார்.

கருங்கடல் நீரையுண் டெழுந்து கார்க்குலம்
பெருந்தரை எங்கனும் பெய்தல் இல்லையால்
இருந்தமைங் கூழெலாம் கருகி எங்கணும்
பரந்தது சிறுவிலைப் பஞ்ச மானதே".[1]


"காயிலை கிழங்கெலாம் கருவ றுத்துக்கான்
மேய்விலங் கினம்பல கொன்று மென்றுமே.
தீயவப் பசிப்பிணி தீண்டவாற் சன
மாய்வுறு சடலம்பல மலிந்த காலமே"[2]

என்ற இரு பாடல்களிலும், இயற்கையின் வறட்சியை ஆசிரியர் வருணித்துள்ளார்.

இயற்கையின் வளமை

வறட்சி ஒருபுறமும், வளம் மறுபுறமும் ஆட்சி செலுத்துவதைத் தானே இவ்வையத்தில் கண்டு வருகிறோம். காவிய ஆசிரியனும், இவ்விருவேறு முரண் சித்திரங்களைத் தம் காவியத்தில் வடித்துக் காட்டுகிறான். உமறுவும் இயற்கையின் வளமைக் காட்சியாய்த் தேனாறு பெருக்கெடுத்தோடுவதைக் காட்டுகிறார். கழனிகளின் வரப்புக்களை, எருமைகள் சொரிகின்ற பால் வெள்ளமும், வாழைக் கனி உடுத்த



8

  1. 1. சீறா அலிமா முலையூட்டுப் படலம் 8
  2. 2. சீறா. அலிமா முலையூட்டும் படலம் 13