பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182


லுக்கு ஒப்பிடுகிறார். இயல்பாகக் கடல் தன்னிடத்தேயுள்ள செல்வங்களைத் தன் அலைவீச்சுகளால் கரையில் ஒதுக்கும் தன்மையுடையது. அத்தகைய வலிமை வாய்ந்த அலைவீச்சுகளால் தாழ்ந்துவிடாது உயர்வாக நிற்கின்ற செம்பவளக் கொப்பு போன்றவர்கள் ஆமினா ஆகலின் குறைஷியா குலம் எத்தனை பெரிய சிறப்புகளைப் பெற்றிருப்பினும் ஆமினா பெற்ற சிறப்பே தலையாய சிறப்பு என்று போற்றுகின்றார் புலவர்.

அடுத்து, ஆமினா அவர்களின் நகையழகையும், மொழி இனிமையையும் பாராட்டிப் பேசுகிறார் உமறு. முத்த வெண்ணகையினையும், 'கனிமொழி'யினையும் பெற்ற 'குலமயில் ஆமினா'வும் மோகன சித்திர அப்துல்லா என்னும் செம்மலும்', 'ஒத்து இனிது அமுதம் உண்டு' வாழ்ந் தனர் என்பது கவியின் கூற்று,

நவமணிகளில் உயர்ந்தனவும் சிறந்தனவுமாகிய மாணிக்கம் பவளம், முத்து மூன்றையும் பண்பும் பயனும் குறித்து உவமிக்கும் நயம் உமறுப்புலவரின் புலமைத் திறனுக்கு எடுத்துக்காட்டாயமைகிறது.

இன்பியலைத் தொடங்கிய விரைவிலேயே துன்பியலையும் காண வேண்டிய நிலை வந்துவிடுகிறது. அன்னை ஆமினா அவர்களுக்கு, நபிகள் நாயகம் அவர்களைச் சூல் கொண்ட ஏழாம் மாதத்தில் அப்துல்லா வாணிபத்திற்காகச் சென்ற இடத்தில் இறந்துவிட்டார். ஆமினாவின் துன்பம் தொகுத்துரைக்கத் தொலையாத ஒன்றாகிவிடுகிறது. உலக மக்கள் துன்பத்தை மாற்ற வந்த பெருமானார் நபிகள் நாயகத்தின் தாய் கணவனை இழந்து நிற்கும் துன்பத்திற்கு இலக்கானார் என்றால் அவரைத் தேற்ற வல்லார் யார்? உலகியல் உணர்ந்தும், உறவினர் கூறிய மொழிகளாலும் தன்னைத் தானே தேற்றிக் கொள்ளும் திறம் பெறுகின்றாள் ஆமினா.