பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

203


கதீஜா நாயகியின் கண்கள் என்னும் கயல்மீன்கள் ஒடிக் குதித்தன. பார்த்தகண் பார்த்தபடியே இருக்க நாணம் அவரை ஆட்கொண்டு விட்டது. தன்னுடைய ஆவலை-காதலை-வெளிப்படுத்தாமல் "நாண் என்கிற போர்வைப் போர்த்திக் 'கற்பெனும் வேலி' அமைத்துக் கொள்கிறார்.

உலக நாயகன்-நாயகராகிய முகம்மது கதீஜா காதலை இன்ப சுவைமிக்கக் களவு-கற்பியல் காட்சிகளைப் பண்டைத் தமிழர் தம் இன்பியல் வாழ்க்கை பின் சாயலிலே தமிழ் அக இலக்கியக் கொள்கையின் வழி விவரித்துச் சொல்கிறார் உமறுப்புலவர்,

முகம்மதுவைக் கண்டு மயங்கி நின்ற கதீஜாவின் நிலை கண்ட 'ஹக்கத்து' என்னும் மெய்மொழி முறைகள் தேர்ந்த பண்டிதர், கதீஜாவை நோக்கி, முகம்மதுவை அவர் மனைக்கு அனுப்புவதே நலமுடையது என்கிறார். புறப் பட்டுச் சென்ற முகம்மதுவின் பின்னே கதீஜாவின் கண்ணும் மனமும் பின்தொடர்ந்து சென்றன’ என்கிறார் உமறு.

இதயங்கள் மாறிப் புகுந்த காட்சியை காவிய நெறியுடன் கவிதையாகப் பாடுகிறார் உமறு.

"படியினிற் சசியுஞ் செங்கேழ்ப் பரிதியுநிகரொவ் வாத
வடிவெடுத் தனைய வள்ளல் முகம்மதி னெஞ்சமென்னுங்
கடிகமழ் வாவி யூடு கருத்தெனும் கமல நாப்பண்
பிடிநடைக் கதீஜா வென்னும் பெடையனமுறைந்த தன்றே " [1]

உமறு பாடிய 'பாதை போந்த படலம்' இன்பச்சுவை சொட்டும் காப்பியப் பகுதியாகும். கதீஜா கனவு கண்ட படலத்தில் காதல் வயப்பட்டுப் பிரிந்திருக்கும் தலைவியின் நிலையைச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடுகிறார் உமறு.


  1. 1. சீறா. பாதை போந்த படலம் 47