பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206


"வல்லிய மெனுமுகம் மதுதம் மாமணம்
புல்லிய புயவரைப் படர்ந்த பொற்கொடி
முல்லையங் குழற்கதி ஜாமின் னேமுத
லில்லறத் தொடுமிக லாமி லாயினார்."[1]


பெண்களில் பெருமை பெற்றவர் கதீஜா வாணிப நுணுக்கத்தையும், செல்வத்தைப் பெருக்கும் முறைகளையும் ஈட்டிய பொருளை இறை பணி அறப்பணிகளில் செலவிடுவதிலும் வல்லவராயிருந்தார். மக்களிடத்தில் அன்பும், ஆதரவும் காட்டி அவர்களை சிறப்பாக எளியவர்களை வாழ்வித்த வள்ளலாக இருந்தார். வறுமையிலிருந்து நபிகள் நாயகத்தையே செல்வந்தராக உயர்த்தியது கதீஜா பிராட்டியார் கொடுத்த முதலும், அவர் காட்டிய அன்பும் நேர்மையும்தான் என்பது தெள்ளத் தெளிந்த உண்மை. அன்று பெண்களும் சமய வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டு உண்மை தெளிந்து உய்ந்தனர் என்பதற்குத் தலையாய சான்று அன்னை கதீஜா, கனிமொழி கதீஜா நாயகி, கணவன் கொண்ட கொள்கையில் அசையாத நம்பிக்கை கொண்டவர்: பகைவர்களுக்கிடையே இஸ்லாத்தை நிலைநாட்ட வந்த வள்ளல் முகம்மதுவுக்கு அன்புக்கு ஆதரவும் காட்டி நம்பிக்கையும் ஊட்டி இறை பணி செய்ய உறுதுணையாய் நின்றவர்; முகம்மதுவிற்கு அரசியல் சமய இடர்கள் வந்துற்றபோது துணைநின்று ஊக்குவித்தவர்: மலைபோல் துன்பம் வந்தாலும் அல்லாஹூத்த ஆலாவின் அருளால் அவை பணிபோல் மறையும் என்று எடுத்துக் கூறி இறை தூதருக்கு இன்னுரை பகன்றவர்.

இருபத்தைந்து ஆண்டு முகம்மது நபி (சல்) அவர்களுடன் இணைந்து வாழ்ந்த கதீஜா நாயகி அவர்கள் இல்வாழ்க்கைக்கு இலக்கணமாயமைந்த சிறப்பை 'சீறா' சிறப்பாகச் செப்புகின்றது.


  1. 1. சீறா, தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 5