பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

245


இரக்கமுற்ற ஏந்தல் நபி அதனின் முதுகில் தடவினார்கள். ஆடு இளமையுடன் திகழ்ந்தது. பாலெழுந்து பீறிட்டு பூமியிலோடிற்று எனும் அற்புதம் பகரப்படுகிறது. இதனை இமாம் பர்சன்ஞ்சியும் கூறுகின்றார்.

ஓநாய் பேசிய படலம்

இப்படலத்தில், மக்க மாநகரை அண்மித்த கானகத் தில் ஓநாயொன்று-மானை விரட்டிச் செல்ல-அந்த மான் ஹரம் ஷரீபுக்குள் சென்று விட்டது. அங்கு நின்றிருந்த குறைஷிக் கொடுமனத் தலைவர்களாகிய அபூஜஹல், அபூஸுப்ய்யான் ஆகியோர்களிடம் அறநெறி போதித்த அற்புதம் பற்றிப் புலவரேறு உமறு பாடுகிறார்.

பதுறுப் படலம்

நபிகள் நாயகம் மாற்றார் படைத் தலைவர்களும் மன்னர்களும் போரில் இறக்கும் இடம் இது இதுவெனத் தோழர்களுக்குச் சுட்டிக் காட்டிப் படையை அணிவகுத்தார்கள் (..7). பெருமானாரின் 'முன்னறிவித்தல்' எனும் அற்புதத்தோடு, பகைவர்களை நிச்சயம் வெல்ல முடியும் எனும் நம்பிக்கையை - வீர உணர்வினை - வீரர்களுக்கு உணர்த்துவதாகவும் அமையும். அண்ணல் முகம்மது (சல்) முன் கூறியவாறு யார் யார் எங்கெங்கென 228 பேர் (ஒலிது, உக்குவா, உத்துபத், சையத், உமையா, உமாறா) இறந்தொழிந்தனர் என்பது காட்டப்படுகிற அற்புதத்தைக் காணலாம்.

இப்போரில் போர்க்களத்திலிருந்து ஆயுதங்கள் எல்லாம் முறிந்து திரும்பிய உகாசா (றலி) அவர்களுக்கு பூமியில் கிடந்த கோலொன்றினை அண்ணல் எடுத்துக் கொடுத்த கரம் பெற்ற கோல் மின்னும் வாளாகியது (157) எனும் அற்புத நிகழ்வு கூறப்படுகிறது.

'போரின் இறுதியில் நாயகமவர்கள் திருக்கையால் மண் வாரி ஓதி வீச எதிரிகளின் பலம் கெட அழிந்தார்கள்.