பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25


இருந்தனர் என்று இப்னு பதூதா குறித்துள்ளார் பாண்டிய நாட்டை ஆண்டு வந்த ஜாதவர்மன் சுந்தர பாண்டியனின் முதலமைச்சராக ஸையித் தகிய்யுத்தீன் என்பார் பதவி வகித்திருக்கிறார். அவருடைய சகோதரர் ஸையித் ஜமாலு தீன் சீன மன்னன் குப்ளாய்கான் அரசவைக்குப் பாண்டிய நாட்டுத் தூதராகச் சென்றிருக்கிறார் . இலங்கை மன்னன் பராக்கிரம பாசவை அடக்கச் சென்ற தமிழர் படைக்கும் இவரே தளபதியாகச் சென்றார்.

இச்காலத்தில்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர் தென்னாட்டில் படையெடுத்து வந்தார், பாண்டிய நாட்டின் நிர்வாகமும், இராணுவப் பொறுப்பும் முஸ்லிம்கள் கையிலிருந்ததை அறிந்த மாலிக் காபூர் தாம் மதுரையைத் தாக்கப் போவதாகவும் அப்போரில் பாண்டியரின் முஸ்லிம் போர் வீரர்கள் பங்கு பெறாது ஒதுங்கியிருக்க வேண்டும் என்று இரகசியமாகக் கோரினார்.

'நாங்கள் பாண்டிய நாட்டு குடிமக்கள். இந்த நாட்டு உப்பைத் தின்று வளர்ந்த நாங்கள் இந்த நாட்டுக்குத் துரோக செய்ய மாட்டோம். உங்கள் படையை போர்க்களத்தில் சந்திப்போம்!" என்று சூளுரைத்துப் போர் புரிந்தனர் முஸ்லிம் வீரர்கள்.

இப்படித் தமிழக மக்கள் வாழ்வோடு ஒன்றாகக் கலந்து விட்ட முஸ்லிம்கள். தமிழ் மொழியையும் தங்களதாக்கிக் கொண்டார்கள் ஓவியம், நாட்டியம் போன்ற துறைகள் விலக்கு என்று கருதப்பட்டமையால், முஸ்லிம்கள் இலக்கியப் படைப்பில் பெரிதும் ஈடுபட்டிருந்தனர். இந்த இலக்கியப் படைப்பில் பெரும் பகுதி மதச் சார்புடையதாக இருந்தது வியப்பிற்குரியது அல்ல! ஏனெனில் தமிழகத்தில் சென்ற நூற்றாண்டு வரை தோன்றிய இலக்கியங்கள் பொதுவே சமய இலக்கியங்களாகவே இருந்தன, எனவே, இராம காதையும், வில்லி பாரதமும் சிலம்புச் செல்வமும் கவிஞர் கா. அப்துல் கபூர் அவர்கள் பாடியிருப்பதுபோல,