பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



383


திருநெல்வேலியைச் சார்ந்த அம்பலவாணக் கவிராயர் முதன் முதலாகத் திருக்குறளையும், நாலடியாரையும் அச்சிட்டார். இந்தியர்கள் அச்சகம் வைத்து நடத்தலாம் என்று 1825-க்குப் பின் அரசு ஒப்புதல் தந்த பிறகே தமிழ் அச்சகங்கள் தோன்றாயின. எனவே, தமிழ் இலக்கியங்கள் 18 5-க்குப் பின்னரே நிரம்ப அச்சாயின.

சீறாப்புராணத்தை முதன் முதலில அச்சிட்ட பெருமை "புலவர் நாயகம்" என்று போற்றப் பெறும், ஷைகு அப்துல் காதிர் நெய்னார் லப்பை ஆலிம் அவர்களையே சாரும். சேகனாப் புலவர் என்று சுருக்கமாக அழைக்கப்பெறும் இவர் சிறந்த பதிப்பாசிரியர் மட்டுமல்லாது, படைப்பாசிரியருமாவார். மாபெருங் காவியமான 'புதுகுஷ்ஷாம்' என்பதை யும் "காரணப் புராணம்" முதலான பல நூல்களையும் படைத்த பெருங்கவிஞர் இவர் குணங்குடி மஸ்தானுக்கு இவர் வித்தையிற்றோழன்,

உமறுப்புலவர் இயற்றிய ஒப்பற்ற சீறா ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேல் அச்சில் வராது பலராலும் கையால் எழுதப் பெற்று படிக்கப்பட்டு வந்தது. காவியச் சுவை காரணமாகப் படிகள் நிரம்ப ஆனமை போல கர லிகிதப் பிழைகளும் மலியலாயின. இதனையறிந்து காயல்பட்டினத்தைச் சேர்ந்த உவைசு நயினார் லெப்பை என்பவர் சேகனாப் புலவரை அணுகிச் சீறாவை எவ்வாறேனும் அச்சேற்ற வேண்டுமென்று வேண்டுக்கோள் விடுத்தார், அவரும் அதற்கிணங்கப் பற்பல ஊர்களிலிருந்து சீறாப்புராணக் கையெழுத்துப் படிகளை வரவழைத்துப் பதிப்பித்தார்.

அவர் சீறாவை அச்சிற் பதித்த வரலாறு என்பது தனியாக நூலில் முன்னுரைபோல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நூலை முதன் முதலில் பதிப்பிக்கும்போது எவ்வளவு இடையூறுகள் இருக்கும் என்பதற்கும். ஒரு நூலைப் புதிதாகப் பதிப்பிக்கும்போது என்னென்ன முறைகளைக் கையாள வேண்டுமென்பதற்கும் கீழ்வரும் வரிகளே சான்றாகும்.