பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

387

அதனைப் பயன்படுத்திக் கொண்டு மறுபதிப்பை உடனே கொண்டு வந்திருக்க வேண்டும். இது இயலுமா என்ற வினா எழுந்தது.

ஆனால் “சின்னச் சீறா”வென வழங்கும் சீறாவின் தொடர் காப்பியம் முதல் பதிப்பு 1855 சனவரியிலும் இரண்டாம் பதிப்பு 1856 ஆகஸ்டிலும் வெளிவந்துள்ளன. இதை நோக்கும்போது சேகனாப் புலவரும் ஓராண்டிற்குள் தம் மறைவுக்கு முன் இரண்டாம் பதிப்பை வெளியிட்டிருத்தல் வேண்டும்.

ஏனெனில் இரண்டாம் பதிப்பில் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகின்றார். “முற்பதிப்பி லச்சு மாறாட்டமாய்க் கிடந்த சில வெற்றுக்களை இப்பதிப்பிற் றிருத்தப்பட்டன வென்று முகப்பிலும் எழுதியிருக்கின்றனம்” என்று குறிப்பிடுகின்றார்.

போலிச் சீறா

சேகனாப் புலவர் சீறாவை அச்சிட்டு நூல் ஒன்றுக்கு ஒரு வராகன் விலை வைத்து விற்றார். அச்சமயம் திருச்சியிலிருந்த சாந்துக்கார சம்சுத்தீன் என்பவர் புலவரை அணுகி ஒரு வராகன் கொடுத்து நூலொன்று வாங்கிச் சென்று அதனைத் தாமே ஒரு பதிப்பு அச்சிட்டுக் குறைந்த விலைக்கு விற்றிருக்கிறார். இதனையறிந்த சேகனாப் புலவர் அவரை அழைத்து இவ்வாறு செய்தல் முறையா? என்று கேட்டிருக்கிறார். தாம் வழக்குத் தொடரப் போவதாக அச்சுறுத்தியிருக்கிறார். ஆனால், அதற்ரு அச் சம்சுத்தீன் அஞ்சவில்லை. “வழக்கு வேண்டுமானால் தொடரலாம்” என்று கூறிவிட்டார். அதைக் கேட்ட சேகனாப் புலவர் மனிதர்கள் முன் வழக்கை விரிப்பதைவிட இறைவனிடமே முறையிடப் போவதாகக் கூறுகிறார். ஆனால் ஒரு சில நாட்களில் சம்சுத்தீன் வேறு ஒரு கொலை வழக்கில் சிக்கித் தூக்கிலிடப்பட்டார் என்பது செய்தியாகும்.